கோகர்ணா கணபதியின் கதை
கணபதி தன் புத்தி சாதுர்யத்திற்குப் பெயர்போனவர். கோகர்ணா மகாபலேசுவர் கோயிலில், தலையில் ஒரு குழியுடன் தென்படும் கணபதி விக்கிரகம் உள்ளது. அந்தக் குழியின் காரணத்தையும், கணபதியின் சாமர்த்தியத்தையும் தனக்கே உரிய பாணியில் சொல்லும் சத்குரு அவர்கள், நமக்கான படிப்பினையையும் அருளியுள்ளார். படித்து மகிழ்வோம்...
கணபதி தன் புத்தி சாதுர்யத்திற்குப் பெயர்போனவர். கோகர்ணா மகாபலேசுவர் கோயிலில், தலையில் ஒரு குழியுடன் தென்படும் கணபதி விக்கிரகம் உள்ளது. அந்தக் குழியின் காரணத்தையும், கணபதியின் சாமர்த்தியத்தையும் தனக்கே உரிய பாணியில் சொல்லும் சத்குரு அவர்கள், நமக்கான படிப்பினையையும் அருளியுள்ளார். படித்து மகிழ்வோம்...
சத்குரு:
இராவணன் சிவனின் தீவிரமான பக்தனாக இருந்தான். அவன் தென்பகுதியிலிருந்த தன் இராஜ்ஜியத்திலிருந்து சிவனை வழிபட்டு வந்தான். ஆனால் சில காலத்திற்குப் பிறகு, "நான் ஏன் கைலாயத்தை என் வீட்டிற்கு அருகில் கொண்டுவரக் கூடாது?" என்று நினைத்தான். அதனால் இலங்கையிலிருந்து கைலாயம் வரை நடந்தே சென்றான், பிறகு கைலாயத்தை தனது கைகளால் பெயர்த்தெடுக்க முயற்சித்தான். இதனால் கோபம் கொண்ட பார்வதி, "அவர் உங்களுக்கு எவ்வளவு அன்பானவராக இருந்தாலும் சரி, அவர் கைலாயத்தை தென்பகுதிக்கு எடுத்துச்செல்ல நீங்கள் அனுமதிக்கக்கூடாது." என்றார். சிவனுக்கும் இராவணனின் அஹங்காரம் மீது கோபம் வந்துவிட, அவர் மலையை கீழே அழுத்தினார், அதனால் இராவணின் கைகள் அதற்கடியில் சிக்கிக்கொண்டன. இராவணன் வலியில் துடித்தான், ஆனால் சிவனோ இராவணனை விடுவிக்கத் தயாராக இல்லை.
Subscribe
கைகள் கைலாயத்திற்குக் கீழே சிக்குண்டபடி, இராவணன் சிவனின் மேல் தனக்கு இருந்த அன்பை வெளிப்படுத்த பல அழகான வெண்பாக்களாகப் பாட ஆரம்பித்தான். முழு அன்புடன் சரணாகதியில் 1001 பாடல்களை இயற்றினான். சிவன் உளம் குளிர்ந்து அவனை விடுவித்து, "உனக்கொரு வரம் தருகிறேன், வேண்டியதைக் கேள்." என்றார். மீண்டும் இராவணின் குணம் தலைதூக்க, "நான் பார்வதியை மணம் முடிக்க விரும்புகிறேன்" என்றான். சிவனும், "சரி, மணந்துகொள், அவள் மானசரோவரில் இருக்கிறாள். நீ சென்று திருமணம் செய்துகொள்." என்றார். சிவனைச் சுற்றி இருந்த கணங்கள் பதற்றமடைந்து, "இது எப்படி நடக்கமுடியும்? இராவணன் பார்வதியைத் தொடக்கூட முடியுமா? இது நடக்கக்கூடாது." என்று ஓடோடி சென்று மானசரோவரில் உள்ள பார்வதியிடம் "இராவணன் வருகிறான், அவன் உங்களை மணந்துகொள்ள சிவன் அனுமதி கொடுத்துவிட்டார்." என்றனர்.
பார்வதி தவளைகளின் அரசியான மண்டூகாவை அழைத்து, அந்தத் தவளையை ஒரு அழகான பெண்ணாக மாற்றினார். இராவணன் பார்வதியைக் கண்ணால் கூடக் கண்டதில்லை, அங்கு வந்து மண்டூகா என்ற பெண்ணைப் பார்த்ததும் அவள்பால் ஈர்க்கப்பட்டான், பிறகு திருமணமும் செய்துகொண்டான். அந்தப் பெண்தான் மண்டோதரி.
அதற்குப் பிறகு இராவணன் தீவிரமான சாதனை செய்து சிவனிடம் இருந்தே சக்திவாய்ந்த ஜ்யோதிர்லிங்கத்தைப் பெற்றுக்கொண்டான். சமூகத்தில் சரியா தவறா என்பது சிவனுக்கு ஒரு பொருட்டில்லை. உண்மையான அன்புடன் செய்யப்படும் எதுவாக இருந்தாலும் சிவன் அன்பில் நெகிழ்ந்துவிடுவார். அவன்தன் தேசத்திற்கு எடுத்துச்செல்ல இராவணனுக்கு சிவன் ஒரு ஜ்யோதிர்லிங்கத்தைத் தந்தார். இராவணன் அந்த ஜ்யோதிர்லிங்கத்தை எங்கு கீழே வைத்தாலும் அது நிரந்தரமாக அங்கேயே இருந்துவிடும் என்றும் சிவன் கூறினார். இடையில் எங்கும் ஜ்யோதிர்லிங்கத்தைக் கீழே வைக்கக் கூடாது, அப்படி வைத்துவிட்டால் அது அங்கேயே நிரந்தரமாக ஸ்தாபிக்கப்படும் என்ற ஒரே நிபந்தனையுடன் சிவன் அதனை வழங்கியிருந்தார்.
மிக கவனமாக, மிகுந்த உறுதியுடன் இராவணன் ஜ்யோதிர்லிங்கத்தை சுமந்தான். அவன் தேர்ந்த யோகி என்பதால், எல்லா விஷயங்களையும் கவனித்துக்கொண்டான், உண்ணவில்லை, சிறுநீர் கழிக்கவில்லை, ஒவ்வொரு மனிதருக்கும் கட்டாயமான தேவையாக இருக்கும் எதையும் செய்யாமல் கைலாயத்திலிருந்து தோராயமாக 3000 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கர்நாடகத்தின் கோகர்ணா எனும் இடத்திற்கு வந்தான். ஒரு மனிதனாக சாதாரணமாகத் தேவைப்படும் எதையும் எடுத்துக்கொள்ளாமல் நடந்ததால் அவன் உடல் பலவீனமாக உணர்ந்தான், சிறுநீர் கழிக்க விரும்பினான். உணவு உட்கொள்ளாததால் தண்ணீர் மட்டும் குடித்திருப்பான். அவனுடைய சிறுநீர்ப்பை கிட்டத்தட்ட நான்காயிரம் லிட்டர் தண்ணீர் சுமக்கும் நிலைக்கு வந்திருக்கும், அதற்குமேல் அவனால் அடக்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும்! ஆனால் லிங்கத்தைக் கீழே வைக்க முடியாததால், இயற்கையின் அழைப்பை ஏற்காமல் இருந்தான். மிகவும் கீழ்த்தரமான செயலாக அவன் கருதுவதை, உடலில் லிங்கத்தை வைத்துக்கொண்டு செய்யக்கூடாது என்று நினைத்தான்.
பிறகு பார்ப்பவர் உள்ளத்தைக் கவரக்கூடிய ஒரு வெள்ளந்தியான மாடு மேய்க்கும் சிறுவனைப் பார்த்தான். அந்தப் பையன் புத்தியில் சற்று மந்தமானவன் போலத் தெரிந்தான். புத்திசாலியான ஒருவருக்கு விலைமதிப்பில்லாத ஏதோ ஒன்றைக் கொடுத்தால் அவன் ஓடிப்போக முயற்சிக்கலாம், அந்தப் பையன் முட்டாள் போலத் தெரிந்ததால் இராவணன் "நான் சிறுநீர் கழித்துவிட்டு வரும்வரை இதை நீ சில நிமிடங்கள் கையில் வைத்துக்கொள். பத்திரமாக வைத்திருந்தால் நான் உனக்கு பொன் ஆபரணம் ஒன்றைத் தருகிறேன். ஆனால் இதைக் கீழே மட்டும் வைக்கக்கூடாது" என்று இராவணன் கூறினான். "சரி" என்று அந்தப் பையன் தலையாட்டினான். லிங்கத்தை அந்தப் பையனின் கைகளில் கொடுத்துவிட்டு சிறுநீர் கழிக்கத் திரும்பினான். உண்மையில் அந்தப் பையன் மாறுவேடத்தில் வந்திருந்த கணபதி. அவர் இராவணன் லிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச்செல்லக் கூடாது என்று நினைத்தார். அப்படி அவன் எடுத்துச்சென்றால் அவன் அமானுஷ்ய சக்தி படைத்தவனாய் மாறிவிடுவான். அதனால் கணபதி அந்த லிங்கத்தைக் கீழே வைத்துவிட்டார், அது மண்ணுள் புதைந்துவிட்டது. இன்று கூட நீங்கள் கோகர்ணாவிற்குச் சென்றால் பாறையில் ஒரு சிறிய துவாரம் இருக்கும். அதற்குள் விரலை விட்டுத் தடவிப் பார்த்தால் லிங்கம் தென்படும், ஏனென்றால் அது மண்ணுக்குள் அமிழ்ந்துவிட்டது.
இராவணனுக்கு மிகவும் கோபமானதால் கணபதியின் தலையில் கொட்டிவிட்டான். அதனால் தலையில் குழியிருக்கும் ஒரு கணபதி சிலையை நீங்கள் கோகர்ணாவில் காணமுடியும். கைலாயத்திற்குத் திரும்பிச் சென்று தன் வேலையை மறுபடியும் செய்ய இராவணனுக்குத் தெம்பில்லாததால் ஏமாற்றத்திலும் கோபத்திலும் மீண்டும் இலங்கை நோக்கி நடந்து செல்லலானான்.
நீங்கள் நல்லவரா கெட்டவரா என்பதைத் தாண்டி, நீங்கள் விருப்பத்துடன் இருந்தால், தெய்வீகம் என்பது எப்போதும் எல்லோருக்கும் கிட்டும் தூரத்தில் தான் உள்ளது. ஆனால் அதனை நீங்கள் வரமாக மாற்றுகிறீர்களா அல்லது சாபமாக மாற்றுகிறீர்களா என்பது உங்களுக்குள் நீங்கள் சுமக்கும் தன்மையைப் பொறுத்தது. உங்களுக்குள் நீங்கள் எப்படிப்பட்ட கண்ணோட்டத்தையும், எப்படிப்பட்ட மனதையும் உருவாக்குகிறீர்கள் என்பதே நீங்கள் பிரபஞ்சத்தை எப்படி பயன்படுத்தப்போகிறீர்கள் என்பதை நிர்ணயிக்கிறது.