கேள்வி:

சத்குரு, கர்மக் கோட்பாட்டைப் பற்றியும், ஒருவர் எவ்வாறு மோட்சத்தை அடைய முடியும், பிறப்பு மற்றும் மறுபிறப்பு சுழற்சியிலிருந்து எப்படி விடுதலை பெறமுடியும் என்பது குறித்தும் சிறிது விளக்கம் தரமுடியுமா?

சத்குரு:

கர்மா என்றால் செயல். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும்போது, நான்கு வகையான செயல்களைச் செய்கிறீர்கள். உங்கள் உடல் ஏதாவது செய்து கொண்டிருக்கிறது - இல்லையெனில், நீங்கள் உயிருடன் இருக்கமாட்டீர்கள். அதேபோல், உங்கள் மனம், உணர்வுகள் மற்றும் உயிர்சக்திகளும் சில செயல்களைச் செய்கின்றன. இந்த நான்கும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு க்ஷணமும் நடக்கின்றன - விழிப்பிலும் தூக்கத்திலும். உங்கள் கர்மாவில் 99% க்கும் மேல், உங்கள் செயல்கள் விழிப்பற்ற நிலையில் உள்ளன. ஆனால் இந்த செயல்களின் எஞ்சிய நினைவு பதிவுகள் உங்களுக்குள் சேமித்து வைக்கப்படுகின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
மனித அமைப்பு ஒரு தனித்துவமான இயந்திரம். இது எதையும் தவற விடுவதில்லை. நீங்கள் அதைப் பற்றி விழிப்புடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இது எல்லா நேரத்திலும் அனைத்தையும் கிரகித்து பதிவு செய்கிறது.

உதாரணமாக, நீங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நடந்து செல்லும்போது, 10 வெவ்வேறு வகையான வாசனைகள் இருக்கலாம், ஆனால் ஏதாவது தீவிரமாக இல்லை என்றால் நீங்கள் அவற்றை உண்மையில் கவனிக்காமல் இருக்கலாம். ஆனால் உங்கள் மூக்கில் நுழைந்த அந்த 10 வெவ்வேறு வாசனைகளும் உங்களுக்குள் பதிவாகி விடுகின்றன. மனித உடல் அமைப்பு ஒரு தனித்துவமான இயந்திரம். அது எதையும் தவற விடுவதில்லை. நீங்கள் விழிப்புடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது எல்லாவற்றையும் கிரகித்து, எப்போதும் பதிவு செய்கிறது. இந்த நினைவு பதிவுகளின் அடிப்படையில், நீங்கள் சில குறிப்பிட்ட போக்குகளை வளர்த்துக் கொள்கிறீர்கள். இந்த போக்குகளுக்கான பாரம்பரிய சொல் வாசனை.

உங்களிடம் உள்ள வாசனையின் வகையைப் பொறுத்து, குறிப்பிட்ட வகையான வாழ்க்கை சூழ்நிலைகளை நோக்கி நீங்கள் நகர்கிறீர்கள். நாம் "இது உங்கள் கர்மா" என்கிறோம் - அதாவது "இது உங்கள் செயல்." துரதிருஷ்டவசமாக, கர்மா என்பது ஏதோ ஒன்றுக்கான தண்டனை அல்லது வெகுமதியாக சித்தரிக்கப்படுகிறது. கர்மா என்பது தண்டனையும் அல்ல, வெகுமதியும் அல்ல. இதற்கு நீங்கள் நினைவுகளை சேகரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்படும்; உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு க்ஷணமும் உங்களுக்குத் தெரியாமலேயே ஒரு "மென்பொருளை" எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மென்பொருள் எப்படி அமைகிறதோ, அதற்கேற்ப நீங்கள் நடந்துகொள்கிறீர்கள், செயல்படுகிறீர்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள்.

கர்மா என்றால் உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்கள் செயலே என்று அர்த்தம். நீங்கள் அதை விழிப்புணர்வோடு உருவாக்குகிறீர்களா அல்லது விழிப்புணர்வின்றி உருவாக்குகிறீர்களா என்பதுதான் கேள்வி. மேலே சொர்க்கத்தில் இருந்து யாரும் உங்கள் வாழ்க்கையை இயக்கவில்லை. கர்மா என்றால் நீங்கள் தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்குகிறீர்கள் என்று பொருள். நீங்கள் பெரும்பாலும் உங்கள் வாழ்க்கையை விழிப்புணர்வின்றி உருவாக்குகிறீர்கள் என்பதை புரிந்து கொண்டவுடன், உங்கள் அறிவு முடிந்தவரை விழிப்புணர்வோடு இருக்க முயற்சிப்பது இயல்பானது அல்லவா?

விழிப்புணர்வு என்பது மின்விளக்கின் வோல்டேஜ் போன்றது. வோல்டேஜை அதிகரித்தால், அது எல்லாவற்றையும் காட்டுகிறது. வோல்டேஜை குறைத்தால், அது சிறிதளவே காட்டுகிறது. விழிப்புணர்வோடு இருக்க முயற்சிப்பதில் எந்த பயனுமில்லை. உங்கள் உயிர் சக்திகளை மிகவும் தீவிரமாக்கினால், விழிப்புணர்வு உங்களுக்குள் எரியும். தீவிரம் இல்லையெனில், நீங்கள் விழிப்புணர்வைப் பற்றி பேசியும் படித்துக் கொண்டும் மட்டும் இருந்தால், அது நடக்காது.

கர்மாவை அழித்தல்

நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இந்திய கலாச்சாரத்தில் கடவுள் நமது இலக்கு அல்ல. கடவுள் என்பது மற்றொரு கருவி மட்டுமே. நமது முடிவான இலக்கும், உயர்ந்த மதிப்பும் விடுதலை, சுதந்திரம், முக்தி அல்லது மோட்சம். இப்போது சொர்க்கம் ஒரு அற்புதமான இடமாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் அங்கு சென்றால், சிறிது காலத்திற்குப் பிறகு சலிப்படைந்து விடுவீர்கள். ஆனால் எப்படி இருந்தாலும், நீங்கள் ஏற்கனவே சொர்க்கத்தில் இல்லை என்பதற்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா? நீங்கள் ஏற்கனவே சொர்க்கத்தில் இருக்கிறீர்கள், அதை அழித்துக் கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் ஆர்வமுடன் இருந்தால், தெய்வீகத்தின் இருப்பு இங்கும் வேறு எந்த இடத்தையும் போலவே உள்ளது.

கர்மா என்பது ஒரு மென்பொருளைப் போன்றது. இது அனைத்தும் ஒரே உயிர்சக்தி தான், ஆனால் வேறுபட்ட மென்பொருளுடன் உள்ளது. அதனால், இது முற்றிலும் வித்தியாசமாக செயல்படுகிறது.

முக்தி என்றால் இந்த சுழற்சியை உடைப்பது என்று பொருள். ஏன் நீங்கள் இந்த சுழற்சியை உடைக்க விரும்புகிறீர்கள்? நீங்கள் துன்பப்படும்போது தான் சுழற்சியை உடைக்க விரும்புவீர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். அப்படி இல்லை. துன்பப்படும் ஒருவர் மீண்டும் மேலும் பணக்காரராக, சிறப்பாக, மேலும் ஆரோக்கியமாக, உயரமாக, இன்னும் அழகாக, மேலும் பலவிதமாக திரும்பிவர விரும்புவார். வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் கண்டவர் மட்டுமே இதற்கு அப்பால் செல்ல விரும்புவார்.

முக்தி என்பது நாம் சேகரித்துள்ள கர்ம தகவல்களை தேய விடுவது. இந்த கர்ம தகவல்கள் தான் உயிரை சிறைப்படுத்தி, அதைச் சுற்றி ஒரு உடலை உருவாக்குகிறது. இந்த கர்மத் தகவல்களை நீங்கள் கட்டவிழ்த்தால், உள்ளே இருக்கும் உயிர் நீங்களாகவோ நானாகவோ அல்ல - அது வெறும் உயிர் மட்டுமே. இது ஒரு உயிருள்ள பிரபஞ்சம். ஒரு உவமையாக சொல்ல வேண்டுமெனில் - நீங்கள் சோப்பு குமிழி ஊதினால், குமிழி உண்மையானது. ஆனால் குமிழி உடைந்தால், ஒரு துளி நீர் மட்டுமே கீழே விழும். குமிழியின் மீதமுள்ள பகுதி மறைந்துவிடும். குமிழிக்குள் இருந்த காற்று சுற்றியுள்ள காற்றுடன் கலந்துவிடும்.

உயிர் உங்களுக்குள் மட்டுமல்ல, அது உங்களுக்கு வெளியேயும் இருக்கிறது. அதனால்தான் நீங்கள் மூச்சு வெளியே விடுகிறீர்கள் மற்றும் மூச்சு உள் இழுக்கிறீர்கள். அது இல்லாமல் உங்களால் இருக்க முடியாது. நீங்கள் அதை ஆக்சிஜன் அல்லது வேறு ஏதாவது என்று அழைக்கலாம், ஆனால் அது முக்கியமல்ல. அடிப்படையில், நீங்கள் உயிர் என்று அழைப்பது எல்லாவற்றிலும் ஊடுருவி இருக்கிறது. அது எந்த வகையான தகவலுடன் சிக்கிக்கொள்கிறதோ, அதற்கேற்ப நடந்துகொள்கிறது. இதைத்தான் நாம் கர்மா என்கிறோம். கர்மா ஒரு மென்பொருளைப் போன்றது. அது அதே உயிர் சக்திதான், ஆனால் வேறுபட்ட மென்பொருளுடன் உள்ளது.

எனவே, அது முற்றிலும் வித்தியாசமாக நடந்துகொள்கிறது. கர்மக் கட்டமைப்பு முழுவதுமாக நீக்கிவிட்டால், உயிர் எங்கே போகும்? எங்கும் இல்லை - அது அங்கேயே இருக்கிறது. தனிப்பட்ட அடையாளம் மட்டுமே இழக்கப்படும். உண்மையில், உங்களுக்குள் இருக்கும் உயிருக்கு எப்போதுமே தனிப்பட்ட அடையாளம் இல்லை. உங்கள் மென்பொருள் மட்டுமே தனித்துவமானது. நீங்கள் அதை விழிப்புணர்வின்றி எழுதினால், அது பல வடிவங்களை எடுக்கும் - அதில் சில உங்களுக்குப் பிடிக்கலாம், மற்றவை பிடிக்காமல் போகலாம். நீங்கள் கர்மக் கட்டமைப்பை விழிப்புணர்வுடன் எழுதினால், நீங்கள் விரும்புவதை உருவாக்க முடியும்.

குறிப்பு:

சத்குரு அவர்களின் ஆழமான புரிதலில் கர்மா செயல்படும் விதம் மற்றும் அதன் சூட்சுமங்களை விரிவாக விளக்கும் 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.