மஹாபாரதம் பகுதி 67: இயற்கையால் மன்னிக்கவே முடியாத ஒன்று
தாம் நடத்திய தர்ம சோதனையில் அனைவரையும் தேர்ச்சியடைய அனுமதித்த கிருஷ்ணர், ஒருவரை மட்டும் தடுக்கும் முடிவை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதற்கான காரணத்தை விளக்குகிறார் சத்குரு.

சத்குரு ஒரு கதையை வாசிக்கிறார்: குருஷேத்திர போருக்குப் பிறகு, உறங்கச் செல்லும் கிருஷ்ணர் ஒரு கனவு காண்கிறார். தொடர்ந்து முடிவற்ற நீண்ட வரிசையில் வரும் ஆண்களும் பெண்களும் தனது தர்மம் என்ன என்று கிருஷ்ணரிடம் கூறுகிறார்கள். ஒவ்வொருவரின் விளக்கத்தையும் கேட்டபிறகு, அதைப் பற்றிய தனது கருத்தை தெரிவிக்கும் கிருஷ்ணர், அவர்களை தொடர்ந்து செல்ல அனுமதிக்கிறார், ஒரேயொரு மனிதனை தவிர. எலுமிச்சை இலைகளை போன்ற வாசனையோடு, சிகைக்கு நன்றாக எண்ணெய் தடவி, முகத்தில் ஒரு இளிப்புடன் வரும் ஒரு நபர் மட்டும், எல்லா தர்மமும் மாயை. நான் உண்கிறேன், குடிக்கிறேன், என் விருப்பம் போல் மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன். எனது உடல் மட்டுமே எனது ஒரே ஆலயம்; தசைகளில் கிடைக்கும் இன்பங்களே நான் வழிபடும் சடங்குகள். இதற்கு மேல் வேறு எதுவுமில்லை; எனக்குப் பிறகும் வேறு எதுவுமில்லை என்கிறான். அதற்கு பதிலளிக்கும் கிருஷ்ணர், நீ அரக்கனின் குழந்தை. நான் உன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன், மேலே செல்ல உன்னை அனுமதிக்கவும் மாட்டேன் என்கிறார்.
கேள்வியாளர்: சத்குரு, கிருஷ்ணர் அனுமதித்த மக்கள் அனைவருமே, மற்றவர்களை சுரண்டியவர்களாக இருந்தார்கள் அல்லது மற்றவர்களால் சுரண்டப்பட்டவர்களாக இருந்தார்கள். ஆனால் கிருஷ்ணர் அனுமதிக்காத அந்த மனிதன் இந்த இரண்டிலுமே சேர்ந்ததாக தெரியவில்லை. அவர் ஏன் தேர்ச்சியடையவில்லை?
சத்குரு:Subscribe
தர்மம் என்பது சமுதாய சட்டங்களைப் பற்றியதல்ல. நீங்கள் சரி - தவறு என்று நினைப்பவை எல்லாமே சமுதாயத்துக்கு ஏற்ற இயல்பில் இருக்கிறது, ஆனால் படைத்தலுடனே முரண்படுவது என்பது முற்றிலும் வேறுவிதமானது. நீங்கள் சுரண்டல், உதவி, அன்பு, கருணை என அழைப்பவை எல்லாமே சமுதாயத்தோடு தொடர்புடைய கருத்துக்கள். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு விவசாயியிடம் சென்று, நீங்கள் உழும் இந்த நிலத்தின் மீது மிகுந்த கருணையோடு நடந்துகொள்ளுங்கள் என்று கூறினால், நீங்கள் எதைப்பற்றி பேசுகிறீர்கள் என்று அவரால் புரிந்துகொள்ள முடியாது. அவர் அழுத்தமாகத்தான் நிலத்தை உழுவார், கருணையோடு மேலோட்டமாக நிலத்தை உழமாட்டார், ஏனென்றால் அப்போதுதான் அது வேலை செய்கிறது. நீங்கள் கருணையோடு லேசாக உழுதால் எதுவுமே விளையாது.
இதுவரையிலும் தங்களது வெறும் கால்களை இந்த மண்ணில் பதித்து நடந்தேயிராதவர்கள் அல்லது பூமித்தாயுடன் தொடர்பிலேயே இல்லாத சிலர் தங்களை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று அழைத்துக்கொண்டு, இந்த பூமியை நேசிப்பதைப் பற்றியும் பூமி மீது கருணையோடு நடப்பதைப் பற்றியும் பேசக்கூடும். அதில் உயிருக்கும் படைத்தலுக்கும் இடையே தொடர்பின்றி இருக்கிறது என்கிறோம். இந்த உயிர் படைக்கப்பட்டுள்ளது, படைத்தவன் இந்த உயிரில் உட்பொதிந்திருக்கிறான் - உங்களால் உண்மையிலேயே அதை பிரிக்க முடியாது. நீங்கள் ஒரு பிரிவினையை உருவாக்கும்போது, நீங்கள் துன்பப்படுகிறீர்கள் - சமுதாயத்தில் உள்ள நெறிமுறைகளால் அல்ல. யாரோ ஒருவரை நல்ல மனிதர் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அவர்கள் உங்களைவிட மிகச் சிறப்பான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்க முடியும்.
இந்த கதையில், மனித வடிவில் உள்ள கிருஷ்ணர் உறக்கத்தில் இருக்கிறார், படைக்கப்பட்டுள்ள அனைத்தையும் தன் மூலமாக பேச அனுமதிக்கிறார். படைத்தலோடு தொடர்பின்றி இருப்பதாலேயே உங்களுக்கு துன்பமும் வளர்ச்சியின்மையும் ஏற்படுகிறதே தவிர, நல்லது கெட்டது என்ற உங்கள் கருத்துக்களால் அல்ல என்கிறார் கிருஷ்ணர். படைத்தலுடனும் படைத்தவனுடனும் நீங்கள் தொடர்பில்லாமல் இருந்தால், அது உங்களை தனியே தவிக்க விட்டுவிடும். இதை அவர் கூறுவதற்கு காரணம், நீங்கள் தொடர்பற்றவராக இருந்தால் உங்களால் தேர்ச்சியடைய முடியாது. உங்களையும் உங்கள் உடலையும் தவிர வேறு எதுவுமே இல்லை என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தேரவே மாட்டீர்கள்.
வாழ்வின் இனிமை உங்களுக்கு பலன் கொடுக்க வேண்டுமென்றால் நீங்கள் புத்திசாலியாக இருந்தால் போதாது, நீங்கள் படைத்தலோடு தொடர்பில் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். வாழ்வில் இனிமை என்பதே ஒரு இலக்கு அல்ல, நீங்கள் மலர்வதற்கு தேவையான ஒரு நிலை அது. இந்த உயிர் இனிமையை சுவைக்கும்போது தான் மலர்கிறது. உங்களுக்குள் இருக்கும் உயிரின் வேர்கள் வாழ்வின் இனிமையை சுவைக்கவில்லை என்றால் அது தரிசு நிலமாகவே கிடக்கும். அந்த அர்த்தத்தில் தான் கிருஷ்ணர், நீங்கள் உயிரின் மூலத்திலிருந்து விலகி இருக்கிறீர்கள் என்பதோடு, நீங்களே எல்லாமும் என்றும் நினைத்தும் கொள்கிறீர்கள், எனவே உங்களால் தேர்ச்சி அடைய முடியாது என்கிறார். அந்த மனிதன் தேர்ச்சியடைவதை கிருஷ்ணர் தடுக்க வேண்டும் என்றில்லை, இயற்கையின் இயல்புபடியே அவரால் தேர்ச்சியடைய முடியாது.
தொடரும்...
மஹாபாரதம் தொடரின் பிற பகுதிகள்
ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதம் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞானத் தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.