பாலியல் வன்முறை எதனால் நிகழ்கிறது?
இளைஞரும் உண்மையும் இயக்கத்தின் ஒரு உரையாடலின்போது, ஒருவரை கொடிய செயலில் ஈடுபடத் தூண்டுவது எதுவென்று ஒரு மாணவர் கேட்கிறார். முன்பு இளைஞர்களின் உடல்ரீதியான, உணர்வுரீதியான தேவைகளுக்கு இருந்த தீர்வுகள் இப்போது அவர்களுக்கு இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதோடு, தண்டனையில் மட்டுமே கவனம் செலுத்தாமல், ஒரு சமுதாயமாக அவர்களின் தேவைகளுக்கு என்ன செய்யப்போகிறோம் என்று விவாதிக்கும் நேரமிது என்று விளக்குகிறார்.
கேள்வி : ஐயா, நாம் இந்திய தேசத்தை பெண்ணாக பாவித்து 'பாரத மாதா' என்கிறோம். எனினும் பல கற்பழிப்புகளைக் காண்கிறோம், ஆண் தன் சொந்தத் தாய், மகள் அல்லது உடன்பிறந்தவளை பாலியல் வன்முறை செய்த அவலமும் நடந்தேறியுள்ளது. இன்பம் தேடி இப்படி வெறித்தனமாக நடக்கும்படி ஆண்களைத் தூண்டுவது எது?
சத்குரு: நம் பூமியை நாம் 'பூமித்தாய்' என்று அழைக்கிறோம், அப்படியானால் பூமியில் குற்றங்கள் அனைத்தும் நின்றுவிடும் என்று அர்த்தமா? அப்படியில்லை. பலவிதமான குற்றச்செயல்கள் நடக்கின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிச்சயம் நடக்கின்றன. இதில் பல அம்சங்கள் உள்ளன. கோபம்கொண்டு, "அவர்களை தூக்கிலிடுங்கள்" என்று சொல்கிறீர்கள். பாலியல் வன்முறைக்கு தண்டையாக தூக்கிலிட்டால், பெரும்பாலும் கற்பழிப்பு வழக்குகளில் சாட்சியமாக இருப்பது பாதிக்கப்பட்ட பெண்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். கற்பழிப்பு குற்றம் செய்து அகப்பட்டுவிட்டால் தூக்குதண்டனைதான் என்று நீங்கள் குற்றவாளிக்கு உறுதியாகச் சொன்னால், அவன் என்ன செய்வான் என்று நினைக்கிறீர்கள்? அந்த ஒரே சாட்சியை அப்புறப்படுத்திவிடுவான். எனவே ஏதோவொன்று சொல்வதற்கு முன், நாம் என்ன சொல்கிறோம் என்று நாம் கவனமாகப் பார்க்கவேண்டும். அப்படியானால் நான் அவர்களை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. நீங்கள் தீர்வைத் தேடுகிறீர்களா, இல்லை கங்காரு நீதிமன்றம் வைத்து "அனைவரையும் தூக்கிலிடுங்கள்" என்று கட்டளையிடப் போகிறீர்களா என்றுதான் நான் கேட்கிறேன்.
இந்த தலைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இது ஏன் நிகழ்கிறது என்று நாம் பார்க்கவேண்டும். ஒரு விஷயம், இந்திய கலாச்சாரத்தில், முதன்முறையாக பெண்கள் வெளியே வந்து வீதிகளில் நடமாடுகிறார்கள், ஆண்களுக்கு மிக அருகாமையில் வேலைசெய்கின்றனர். மக்களுக்கு இது பழக்கமான விஷயமல்ல. அதோடு லட்சக்கணக்கான இளைஞர்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். அவர்கள் கிராமத்தில் பார்த்திருக்கும் பெண்கள் என்றால், அவர்களுடைய அம்மாவும் அத்தையும் பாட்டியும்தான். இப்போது அவர்கள் தெருக்களில் இளம் பெண்கள் நடமாடுவதைப் பார்க்கிறார்கள், அது அவர்களுக்கு மிகவும் புதிதாக இருக்கிறது. நாம் நிதர்சனத்தை பார்க்க மறுத்து, வேறெங்கோ இருந்து பூமியில் விழுந்தது போல நடந்துகொள்ளக்கூடாது.
மனிதர்களுக்குள் பாலுணர்வு என்பது இருக்கிறது. 15 முதல் 25 வயதுவரை இந்த ஹார்மோன்களின் தாக்கம் அதிகபட்ச வீரியத்தில் இருக்கிறது. ஒருவர் ஒழுக்கத்துடன், மனதை ஓரளவு பண்படுத்தியிருந்தால், தன்னை வெளிப்படுத்தவும் ஈடுபடுத்தவும் விளையாட்டு, கலை, இசை, கல்வி மற்றும் இன்னபல விஷயங்கள் இருக்கின்றன. உங்களை ஈடுபடுத்த எதுவும் இல்லையென்றால், உங்கள் ஹார்மோன்கள் மட்டுமே உங்களுக்குள் வெடித்துக்கொண்டிருந்தால், கிராமத்திலிருந்து திடீரென நகரத்துக்குள் வரும்போது இந்த இளம்பெண்களைப் பார்க்கிறீர்கள். திரைப்படங்களில் பார்த்தது போல பெண்கள் தெருக்களில் நடமாடுவதைப் பார்க்கிறார்கள். அந்த இளைஞனுக்கு இதைக்கண்டு பைத்தியமே பிடிக்கிறது. அதற்கும் மேல் நீங்கள் எல்லாப்பக்கமும் மது அருந்துவதையும் ஊக்கப்படுத்துகிறீர்கள். மாலைப்பொழுதுகளில் இரண்டு சொட்டு மது அவன் நாவில் பட்டவுடன் முற்றிலுமாக கட்டுப்பாட்டை இழக்கிறான். எவரும் பார்க்காத சமயத்தில் அவன் யாராவது மேல் பாய்கிறான்.
Subscribe
மனிதாபிமானமற்ற சூழல்
யாரோ ஒருவர் குற்றம் புரியும்போது அவரை தண்டிக்கவேண்டும், அது வேறு விஷயம். அதுபற்றி நான் பேசப்போவதில்லை. ஆனால் சமுதாயரீதியாக இதற்குத் தீர்வுதான் என்ன?
இதில் சமுதாயரீதியான சிக்கலும் இருக்கிறது. அவன் கிராமத்தில் இருந்திருந்தால், அவனுடைய அம்மாவோ அத்தையோ வேறு எவரோ அவனிடம், "அந்தப் பெண்ணை உனக்குத் தெரியுமா, அவளைத்தான் உனக்கு மணம்முடித்து வைக்கப்போகிறோம்" என்பார்கள். அந்தப்பெண்ணை அவன் பிற்காலத்தில் திருமணம் செய்கிறானா இல்லையா என்பது விஷயமல்ல, ஆனால் அவன் மனதில் அவனுடைய தேவைகளுக்குத் தீர்வு இருக்கிறது.
இப்போது அவன் நகரத்திற்குத் தனியாக வருகிறான். அவன் வேறு பத்து பையன்களுடன் ஒரே அறையில் தூங்குகிறான், நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் இந்த குப்பையான, மனிதர்கள் வாழத் தகுதியில்லாத சூழ்நிலையில் தூங்குகிறான். அவர்கள் வசிப்பிடம் அகதிகள் முகாமைப் போலத்தான் இருக்கும். பெரும்பாலானவர்கள் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான் வாழ்கிறார்கள். அதோடு அவனுக்கு எந்தத் தீர்வும் இல்லாமல் இருக்கிறது - அவனுடைய ஹார்மோன்களுக்கு, அவன் உடலுக்கு, அவன் உணர்வுகளுக்கு, அவன் வாழ்க்கைக்கு எவ்வித தீர்வும் இல்லாதிருக்கிறது. எவரும் அவனிடம் "என்ன செய்யப்போகிறாய்? யாரைத் திருமணம் செய்யப்போகிறாய்? வாழ்க்கையில் எப்படி செட்டில் ஆகப்போகிறாய்?" என்று கேட்க நாதியில்லை. யாராவது ஒருத்தராவது அவனை கவனிக்கிறார்களா? இல்லை. மாலையில் நண்பர்களுடன் மது அருந்தினால் அவனுக்கு பைத்தியம் உச்சத்திற்குப் போகிறது. அதோடு மக்கள் காட்டுத்தனமான ஆபாச வீடியோக்களையும் விற்பனை செய்கிறார்கள். அவற்றைப் பார்த்தால் அப்படித்தான் அவனும் செய்யவேண்டூம் என்று நினைக்கிறான்.
யாரோ ஒருவர் குற்றம் புரியும்போது அவரை தண்டிக்கவேண்டும், அது வேறு விஷயம். அதுபற்றி நான் பேசப்போவதில்லை. ஆனால் சமுதாயரீதியாக இதற்குத் தீர்வுதான் என்ன? அவர்களுக்குத் துறவிகளாக வாழ கற்றுக்கொடுக்கப் போகிறீர்களா? யோகாவும் ஆன்ம சாதனையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து, இந்த உந்துதல்களிலிருந்து விடுபட்டு வாழும் விதமாக செய்யப்போகிறீர்களா? இல்லை, அவர்களுக்கு அப்படி எதுவும் நீங்கள் கற்றுக்கொடுக்கவில்லை. அவர்களுக்கு என்ன தீர்வு தரப்போகிறீர்கள்? அவன் கிராமத்தில் இருந்திருந்தால் பதினெட்டு பத்தொன்பது வயதிற்குள் திருமணம் செய்து வைத்திருப்பார்கள். இப்போது அவனுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவன் எதுவுமில்லாமல் இருக்கிறான், அதனால் காட்டுத்தனமான செயல்களில் ஈடுபடுகிறான். ஒரு மனிதனின் இயல்பே இதுதான், இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இதுகுறித்த விவாதம் அவசியம்
"நம் இளைஞர்களை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்?" எதுவும் செய்யாமல் பாவ-புன்னியம் பேசுவது வேலைசெய்யப் போவதில்லை.
வெறும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், பெண்களுக்கு பதினாறு பதினெட்டு வயதானவுடன் திருமணம் செய்துவைத்தார்கள். ஆணுக்கு இருபது வயதாதிற்குள் திருமணம் செய்துவைத்தார்கள். அவன் தன் கட்டுப்பாட்டை இழக்கத் துவங்குவதற்கு முன்பாக அவன் தேவைகளுக்கு ஏதோவொன்று செய்தார்கள். ஒரு தலைமுறையாக, ஒரு கலாச்சாரமாக, இன்று சூழ்நிலை மாறிவிட்டது. இப்போது அவன் வாழ்க்கைக்கு எந்தவொரு தீர்வும் இல்லாதிருக்கிறது. நாம் இதுபற்றிய விவாதத்திற்கேனும் திறந்திருக்க வேண்டும், "நம் இளைஞர்களை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்?" எதுவும் செய்யாமல் பாவ-புன்னியம் பேசுவது வேலைசெய்யப் போவதில்லை.
இளமைப்பருவத்திற்கு பல்வேறு அம்சங்கள் உண்டு. ஒரு அம்சம், அவர்களுக்குள் உள்ள ஹார்மோன்களின் தாக்கம் - அதற்கு நீங்கள் ஏதாவது செய்யப் போகிறீர்களா? இல்லை கண்ணை மூடிக்கொண்டு "அப்படி எதுவுமில்லை, சிலரை தூக்கிலிட்டால் எல்லாம் சரியாகிவிடும்." என்று சொல்லப்போகிறீர்களா? அப்படிச்செய்வதால் எதுவும் சரியாகாது. இதற்கு நாம் தீர்வுகாணும் நேரம் வந்துவிட்டது. இதை பாரத மாதாவுடன் தொடர்புபடுத்தாமல், தயவுகூர்ந்து தீர்வுகளைத் தேடுங்கள்!
ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!