கேள்வி: பழக்கங்கள் என்பவை அவ்வளவு எளிதாக போய்விடாது என்கின்றனர். நாம் இளம் வயதில் வளர்த்துக்கொள்ளும் குணங்கள் நாம் இறக்கும்போதுதான் போகுமா?

சத்குரு:

நாம் இதை வேறொரு கோணத்திலிருந்து பார்ப்போம். ஒரு பழக்கம் என்பது உருவாவது அடிப்படையில் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கத்தான் - அது உங்கள் வாழ்க்கையின் குறிப்பிட்ட பகுதியை தானியங்கியாக ஆக்குகிறது. நீங்கள் அது குறித்து ஏதும் நினைக்கவோ, சிந்திக்கவோ தேவையில்லை. நீங்கள் அதை எளிதாக செய்துவிடலாம்.

இயற்கையாக, மனிதனின் தற்காப்பு தொழிற்நுட்ப அமைப்பின் ஓர் அங்கமாக, அவன் சில பழக்கங்களை உருவாக்குகிறான். ஏனென்றால் விலங்குகளைப்போல அல்லாமல், நம் குணாதிசயங்களில் பல நிர்ணயிக்கப்பட்டவை அல்ல. பிற விலங்குகளுக்கு தங்களுடைய குணாதிசயங்களில் பலவும் இப்படித்தான் இருக்கவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. ஒரு நாய்க்கும் மற்றொன்றுக்கும், ஒரு பூனைக்கும் மற்றொன்றுக்கும், சிறு வித்தியாசங்களே காண முடியும். அவர்களுக்கு தனித்துவமான குணம் இருந்தாலும், அவர்களின் குணாதிசயங்களில் பலவும் நிர்ணயிக்கப்பட்டவை. நமக்கு மிகக் குறைந்தவையே நிர்ணயிக்கப்பட்டவையாகும். ஒரு மனிதனுக்கு, அநேகமாக முழுவதும் திறந்தே இருக்கிறது. இதனால், ஒரு குழந்தையாக, நீங்கள் உங்களுக்குள், உங்களுடைய சொந்த பழக்க வழக்கங்களை உருவாக்க முயற்சிப்பதன் மூலம் ஒரு தற்காப்பு முறையை உருவாக்க முயற்சிக்கிறீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பழக்க வழக்கங்களை உதறித்தள்ளுதல்

ஒவ்வொரு குழந்தையும் தன் பிழைப்பிற்காக சில பழக்கங்களை உருவாக்குகிறது. அது பிழைப்புக்கான உள்ளுணர்வு. இந்த பழக்க வழக்கங்கள் மூலம் அவன் சிறிது எளிமையாக செயலாற்ற முடியும். அது ஒரு குழந்தைக்கு மிகவும் பொருத்தமானது. ஆனால் பொதுவாக, இந்த பழக்க வழக்கங்கள் அவர்கள் வளர வளர, அவர்களின் அனுபவ நிலைக்கும், அவர்களைச் சுற்றி நீங்கள் உருவாக்கும் விழிப்புணர்வுக்கும் ஏற்றார்போல் அவற்றை உதறித்தள்ளுகிறார்கள். அனுபவ முதிர்ச்சியால் அல்லது கல்வியால், மக்கள் மாறுவார்கள். மக்கள் அதிசயிக்கத்தக்க விதத்தில் மாறுகின்றனர் - அவர்கள் மூன்று வருடங்களுக்கு வெளியே போய் திரும்பினால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை அடையாளம் காண முடிவதில்லை. அவர்களைப் பற்றிய எல்லாமே மாறிவிட்டது அவர்களின் வித்தியாசமான அனுபவ நிலைகளால்.

ஒருவர் ஆன்மீகப் பாதையில் செல்லத் தொடங்கினால், அவரின் எல்லா பழக்கங்களும் வீழ்ந்துவிடும். ஏனென்றால் நல்ல மற்றும் தீய பழக்கம் என்று எதுவும் இல்லை.

பயத்தில் இருப்பவர்களும் தொடர்ந்து தன்னை பாதுகாத்துக்கொள்வதில் முனைப்பாக இருப்பவர்களும் தங்களின் பழைய பழக்கங்களை எளிதில் விடமுடியாது. புதுமையையும், வாழ்க்கையையும், சாகசத்தையும் தேடுபவர்கள் - தங்களின் பழக்கங்களை எளிதில் விட்டுவிடுவார்கள். ஏனெனில் அவர்கள் தங்களின் வாழ்க்கையை எப்போதும் அவர்கள் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் மாற்றியமைத்துக்கொண்டே இருக்கின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேல், ஒருவர் ஆன்மீகப் பாதையில், தன் பழக்கங்களை விட்டுவிடுகிறார். ஏனெனில் நல்ல மற்றும் தீய பழக்கங்கள் என்று எதுவும் இல்லை. எல்லா பழக்கங்களுமே கெட்டவை தான். உங்கள் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அவை பிழைப்புக்கான கருவிகள். ஆனால் நீங்கள் வளர்ந்தபின், எந்த பழக்கத்தையும் நீங்கள் கொண்டிருக்கக் கூடாது. ஏனெனில் ஒரு பழக்கம் என்பது என்னவென்றால், நீங்கள் உங்களின் வாழ்க்கையை விழிப்புணர்வின்றி நடத்த கற்றுக்கொள்கிறீர்கள். அது பாதுகாப்பானதாக தோன்றலாம். ஆனால், அது பல்வேறு வழிகளில் வாழ்க்கையை உங்களுக்குத் தடுக்கிறது.

பழக்கங்களும் கர்மாவும்

நாம் நம்முள் விழிப்புணர்வின்றி உருவாக்கிய பழக்கங்களை உடைத்தெறிவதற்கு, ஆன்மீகம் ஒரு அடிப்படை கருவியாகும். நாம் கர்மா என்று குறிப்பிடுவதும் இதைத்தான். கர்மா என்றால் நீங்கள் விழிப்புணர்வின்றி சில பழக்கங்களை உங்களுக்குள் உருவாக்குகிறீர்கள், உங்களுடைய நடத்தை அளவில் மட்டுமல்ல, உங்களுக்கு வாழ்க்கை நடக்கும் விதத்திலேயே. மக்கள் தங்கள் வாழ்க்கையை ஆராய்ந்தார்கள் என்றால், சூழல்கள் ஏற்படும் விதமே, வாய்ப்புகள் வரும் விதமே, அவர்கள் பிறரை சந்திக்கும் விதமே, இவை எல்லாமே ஒரு குறிப்பிட்ட முறையில் இருக்கும். இது நீங்கள் உருவாக்கியுள்ள கர்ம அமைப்புகளால் தான்.

பழக்கம் என்பது அந்த கர்ம அமைப்பின் ஒரு சிறிய வெளிப்பாடு தான். நீங்கள் ஒரு குறிப்பிட்ட உள்ளீடை உள்வாங்கி, அதிலிருந்து ஒரு முறையை உருவாக்குகிறீர்கள். அது உங்கள் பழக்கமாகிறது. ஆன்மீக செயல்முறை என்றால், உங்களுக்குள் எதுவும் விழிப்புணர்வின்றி நடக்கக்கூடாது. விழிப்புணர்வின்றி வாழ்க்கையை நடத்துவது வாழ்வதற்கான புத்திசாலித்தனம் இல்லை. நீங்கள் உங்கள் தொட்டிலில் அல்லது உங்கள் தாயின் கருவறையில் அல்லது அதற்கு முன்பே அந்த பழக்கத்தை பெற்றிருக்கலாம், அது விஷயம் இல்லை. நீங்கள் பரிணாம மாற்றத்தை நாடுகிறீர்கள் என்றால், நீங்கள் விடுதலையையும் முக்தியையும் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் எல்லா பழக்கங்களையும் உடைத்தெறிய வேண்டும் - நல்லவை மட்டும் அல்ல, தீயவை மட்டும் அல்ல, எல்லாவற்றையுமே. நீங்கள் சுடுகாடு வரை காத்திருக்கத் தேவையில்லை. சுடுகாடு கூட எல்லாப் பழக்கங்களையும் தகர்ப்பதில்லை.

நீங்கள் சுடுகாட்டிற்கு போனாலும். உங்கள் உடம்பை எரித்தாலும், உங்கள் பழக்கங்கள் உடைக்கப்படுவதில்லை. அது தான் கர்மா என்பது. இது அதையும் தாண்டி செல்கிறது. ஏனெனில் நீங்கள் உங்களின் உடலை தொலைப்பதன்மூலம் இந்த பழக்கங்களை உடைப்பதில்லை. அதனால் நீங்கள் உயிரோடு இருக்கும்போதே, விழிப்பாக இருக்கும்போதே இந்த பழக்கங்களைத் தாண்டி செல்ல முயற்சிசெய்வது மிகவும் முக்கியமாகும்.

பழக்கங்களை உடைத்து வாழ்க்கையை விழிப்புணர்வோடு கையாளுங்கள். உதாரணத்திற்கு, நான் இப்போது பேசுகிறேன் - நான் பழக்கத்தின் காரணமாக பேசலாம் அல்லது விழிப்புணர்வோடு பேசலாம். அது தான் பெரிய வித்தியாசம். நான் உட்கார்ந்து புரணி பேசினாலும் பரவாயில்லை, பத்தாயிரம் பேர் கேட்க விரும்புகின்றனர். ஏனெனில் ஒவ்வொரு வார்த்தையும் விழிப்புணர்வோடு உச்சரிக்கப்படுகிறது, பழக்கத்தால் அல்ல. இதில் எதுவும் பழக்கத்தால் அல்ல. நான் சொல்வதன் கருப்பொருள் எதுவாக இருந்தாலும், மக்கள் அதை கேட்க விரும்புகின்றனர். ஏனெனில் ஒவ்வொரு வார்த்தையும் விழிப்புணர்வோடு வருகிறது. மேலும் அதற்கு சக்தி இருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு சுவாசத்தையும் விழிப்புணர்வோடு உள்ளிழுத்து வெளியே விட்டால், திடீரென உங்கள் மூச்சில் ஒரு வித்தியாசமான சக்தி இருக்கும். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் நீங்கள் விழிப்புணர்வோடு செய்தால், ஒவ்வொரு அசைவுக்கும் அசாத்திய சக்தி இருக்கும். நீங்கள் உயிர்சக்தியை உணர நினைத்தால், நீங்கள் அது குறித்து விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். இல்லையென்றால் உங்கள் உணர்வில்கூட அது இருக்காது.

குறிப்பு:

சத்குரு அவர்களின் ஆழமான புரிதலில் கர்மா செயல்படும் விதம் மற்றும் அதன் சூட்சுமங்களை விரிவாக விளக்கும் 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.