இது யாருடைய கர்மா?
குடும்ப உறுப்பினர்களின் கர்மா உங்களை பாதிக்குமா? உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் உங்கள் செயல்களின் விளைவே என்று சத்குரு நினைவூட்டுகிறார்.
கேள்வி:
என்னுடன் நெருக்கமாக இருப்பவர்கள் என் கர்மாவிற்கு பங்களிக்கிறார்களா? ஆம் என்றால் நான் அதை எப்படிக் கையாள்வது?
சத்குரு:Subscribe
உங்கள் குடும்பம் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்காதீர்கள். யாருக்கு தெரியும் யாருடைய கர்மாவால் யார் துன்புறுகிறார்கள் என்று. அவர்கள் வேறு மாதிரி சொல்லக்கூடும். நீங்கள் உங்கள் குடும்பம் மோசமானது என்று நினைத்தால் - அவர்கள் அவ்வாறு ஆகியிருக்கலாம், ஆனால் எப்போதும் அப்படியே இருக்கமாட்டார்கள். நிலவைப் போல அவர்களுக்கும் பல நிலைகள் இருக்கும். அவர்களுக்கு இனிமையான முகங்களும் விரும்பத்தகாத முகங்களும் உண்டு. இது குடும்பத்தில் அதிக நெருக்கம் இருப்பதால் நடக்கிறது.
உங்கள் வாழ்க்கை, உங்கள் பொறுப்பு
உங்கள் வாழ்வில் எது நடந்தாலும் அது உங்கள் பொறுப்பே. அப்படியென்றால் அது உங்கள் கர்மா, அது நீங்கள் செய்தது. நீங்கள் ஆன்மீகப் பாதையில் இருக்கும்போது, "கர்மா" என்ற வார்த்தையை உச்சரித்தால், அது எப்போதும் உங்களைக் குறிப்பதாகவே இருக்கவேண்டும். பாதகமான ஒன்றைச் சந்திக்கும் ஒருவரை அது அவர்களது கர்மா என்று நினைப்பது, முற்றிலும் தவறான அணுகுமுறை. உங்களின் அடிப்படை மனிதநேயத்தை நீங்கள் தொலைத்துவிடுவீர்கள். அடுத்தவருடைய கர்மாவில் உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இன்னொரு மனிதருக்கு நடக்கும் ஏதோ அசம்பாவிதத்தை நீங்கள் பார்க்கவேண்டியது உங்கள் கர்மா.
நீங்கள் பிறரின் கர்மாவைப் பற்றி குறிப்பிடும் அந்த க்ஷணமே நீங்கள் ஒரு தீய சக்தியாகிறீர்கள். தீமை என்பது எப்போதும் நோக்கத்தால் மட்டுமே அல்ல. தீமை என்றால் நீங்கள் என்ன செய்தாலும் அது உங்களைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு எதிர்மறையாகிவிடும் நிலையில் இருப்பீர்கள் என்று பொருள். மற்றவர்களின் கர்மாவைப் பற்றி நீங்கள் சிந்திக்கத் துவங்கும் க்ஷணத்தில், நீங்கள் அந்த திசையில் நகர்கிறீர்கள்.
ஆன்மீகத்தில் நாம் இதைத்தான் சரிசெய்ய முயல்கிறோம். என்ன நடந்தாலும், இது நீங்கள் தான் என்பது. இது உங்கள் வாழ்க்கையில் நடக்கிறது, அதனால் அது உங்கள் கர்மா. நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள மக்களால் இன்பமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும், இது உங்கள் கர்மா.
அதனால் உங்கள் குடும்பத்திலிருந்து வரும் கர்மாவைப் பற்றி கவலைப்படாதீர்கள் - அப்படி ஒன்றும் இல்லை. “குடும்பம்" என்பது உங்கள் மனத்தில் மட்டுமே இருக்கிறது. உங்கள் குடும்பம் யார், யார் இல்லை, உங்களுக்கு அன்பானவர்கள் யார், யார் இல்லை என்பது முற்றிலும் உங்கள் மனத்தில் தான் உருவாகிறது. உங்களுக்கு மனம் என்று ஒன்று இல்லை என்றால், குடும்பம் என்னும் கருத்தே உங்களுக்கு இருந்திருக்காது. அப்படியென்றால் அவை நீங்கள் செய்தது, உங்கள் கர்மா. உங்கள் வாழ்வில் எது நடந்தாலும் அது உங்களால் தான் என்பதை நீங்கள் உணரவேண்டும். அதைப் பற்றி நீங்கள் விழிப்பாக இருந்தால், நீங்கள் ஒரு தனிமனிதனாகிறீர்கள். இல்லையென்றால், நீங்கள் சிதறிப்போய் இருக்கிறீர்கள். மக்கள் இவ்வளவு சிதறிப்போய் இருப்பதாலும், அவர்களைச் சுற்றியுள்ள பல விஷயங்களுடன் அடையாளப்படுத்திக் கொள்வதாலும், அவர்கள் தங்களை ஒரு முழுமையான ஒற்றை அங்கமாக ஒன்றுதிரட்ட நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். அது நடந்ததும், நீங்கள் தேடுவது ஒரே க்ஷணத்தில் உங்களுடையதாக முடியும்.