Krishna Quotes in Tamil: கிருஷ்ணனைப் பற்றிய சத்குருவின் வாசகங்கள்
குறும்பு செய்யும் சிறுவன் முதல், இறைமையின் வடிவம் வரை கிருஷ்ணன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைப் பற்றிய சத்குருவின் வாசகங்கள் நமக்கு தெளிவையும், வாழ்வைப் பற்றிய் புதிய பார்வையையும் தரக்கூடியவை. அப்படிப்பட்ட 32 சத்குரு வாசகங்கள் இந்தப் பதிவில்...
ArticleJul 29, 2023
கிருஷ்ணனுடைய வாழ்க்கையைப் பற்றிய சத்குருவின் வாசகங்கள் (Krishna Quotes in Tamil)
கிருஷ்ணன் கட்டுக்கடங்காத குழந்தை, மிகவும் குறும்புக்காரன், மயக்கும் குழலிசைப்பவன், நளினமாக நாட்டியமாடுபவன், உள்ளத்தை கொள்ளைகொள்ளும் காதலன், சுத்தமான வீரன், எதிரிகளை இரக்கமின்றி வீழ்த்துபவன், வீடுதோறும் உடைந்த இதயங்களை விட்டுச்சென்றவன், கூர்மையான அரசியல்வாதி, அரசர்களை உருவாக்கிய இராஜதந்திரி, அப்பழுக்கற்ற பண்பாளன், மிக உயர்ந்த யோகி, இறைத்தன்மையின் மிக வண்ணமயமான அவதாரம்.
கிருஷ்ணன் என நாம் குறிப்பிடும் விழிப்புணர்வு நம்மைத் தொடவேண்டுமென நாம் விரும்பினால், நமக்கு 'லீலை' தேவை. லீலை என்பது விளையாட்டுத்தன்மையின் பாதை.
கிருஷ்ணன் – அன்பிற்குரிய குறும்புக்காரன்
கிருஷ்ணன் மீது ஒரு ஒட்டுமொத்த சமுதாயமும் பரவசமாக பித்தேறிக் கிடக்கும்படி அவன் ரசவாதம் செய்திருந்தான். இதுதான் அவனது குழந்தைப்பருவ வாழ்வின் சாராம்சமாக இருந்தது. காண்போரை மயங்கச் செய்யும் அவனது தோற்றப்பொலிவும், இணையற்ற அவனது புன்சிரிப்பும், அவனது குழலும், அவனது நடையின் நாட்டியமும், அவனிலிருந்து வெளிப்பட்ட ஒவ்வொன்றினாலும், அந்த மக்களை அவர்கள் அதற்கு முன்னர் அறிந்திராத ஒரு புதுவிதமான கிறங்கடிக்கும் பைத்தியத்துக்குள் தள்ளிவிட்டான்.
கிருஷ்ணன் பிறந்த நாளிலிருந்து, சிலர் அவனைக் கொல்வதற்கு முயற்சித்துக்கொண்டு இருந்தனர். அவன் பல அதீதமான சூழல்களை எதிர்கொண்டபோதிலும், அவன் தன் வாழ்க்கையை வேடிக்கையாகவே கழித்தான். இதுதான் கிருஷ்ணனை, பாரதத்தின் சமுதாயப் பண்பினுடைய பிரிக்க முடியாத அடிப்படைக்கூறாக உருவாக்கியது.
கிருஷ்ணன் தனது வாழ்க்கையை, அது ஒரு கொண்டாட்டம் என்பதுபோலவே வாழ்ந்தான். சிறு குழந்தையாக இருக்கும்போதுகூட, அவனைப் பற்றி அழகான விஷயங்களை அவன் கூறினான். அவன் கூறிய ஒரு விஷயம், “நான் காலையில் எழும்போது, பசுக்கள் கத்துவதையும், அவற்றிடம் பால் கறப்பதற்கு முன், ஒவ்வொரு பசுவையும் அதன் பெயரிட்டு என் தாய் அழைப்பதையும் கேட்கும்போது, நான் விழித்தெழுந்து கண்களைத் தேய்த்துக்கொள்வதற்கும், புன்னகை செய்வதற்குமான நேரம் வந்துவிட்டதை அறிந்துகொள்கிறேன்."
போருக்கு சென்றபோதுகூட, கிருஷ்ணன் ஒரு மயில் இறகை அணிந்திருந்தான். அவன் வீண்பெருமை பேசும் மனிதனல்ல, அவனது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒரு கொண்டாட்டமாகச் செய்வதற்கு முழுமையாகப் பொறுப்பேற்றவன். அது அவனது உணர்ச்சியாக, மனமாக, செயலாக அல்லது ஆடை அணிகலன்களாக, எதுவாகவும் இருக்கலாம் – அவனைச் சுற்றிலும் இருந்தவர்களுக்கு அவன் சிறப்பானவனாக இருப்பதையே எப்போதும் விரும்பினான். இது காதல்.
கோபாலன் – வசீகரிக்கும் மாடு மேய்ப்பவன்
மக்கள் வழக்கமாக, கடுந்துறவு பூண்ட மாபெரும் யோகிகள் அல்லது அரசர்களிடத்தில் மட்டும்தான் இறைமையை அடையாளம் கண்டனர். கிருஷ்ணன் வெறுமனே மாடு மேய்ப்பவனாக இருந்தபோதிலும், மக்களால் அவனது அழகை, ஞானத்தை, வலிமையை, மற்றும் வீரத்தைப் புறக்கணிக்க இயலவில்லை.
கிருஷ்ணனை நாம் கோபாலன் என்று குறிப்பிடும்போது, அவனைப்பற்றி ஒரு அன்பான முறையில் நாம் பேசுகிறோம். அவனை நாம் கோவிந்தன் என்று அழைக்கும்போது, இறைவனாக அவனுக்கு நாம் தலைவணங்குகிறோம்.
கிருஷ்ணனின் எளிமையும், கருணையுமான இருப்பும், அவனைச் சுற்றிலும் ஒவ்வொன்றையும் அவன் அணுகிய விதமும், அவனது நடையும், உடல் மற்றும் மனதின் சமநிலையும் – மக்களால் தங்கள் கவனத்தையும், கண்களையும் அவனிடமிருந்து விலக்கமுடியவில்லை.
கிருஷ்ணனின் வெளிப்புற ஒளிவட்டத்தின் நீலத்தன்மை, அவனை தாங்கொணா ஈர்ப்பு கொண்டவனாக்கியது.
கிருஷ்ணன் ஒரு சிசுவாக இருந்தபோதே, அவனைக் கொல்வதற்காக வந்த கொலையாளி பூதனைகூட, அவன்மீது அன்பில் வீழுமளவுக்கு, கிருஷ்ணன் தவிர்க்கவியலாத ஈர்ப்பு கொண்டிருந்தான்.
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
அறிந்தோ, அறியாமலோ, கிருஷ்ணனைச் சுற்றியிருந்த மக்கள் அதீத அன்பும், இனிமையும் கொண்டவர்களாயினர். மக்கள் தங்களது இனிமையான தன்மையை வெளிக்காட்டுவதற்கு அவன் ஊக்கமளித்தான்.
இது கிருஷ்ணனின் சாதனாவாக இருந்தது – அவனைச் சுற்றிலுமிருந்த உயிர்களுடன் அவன் மிகச் சரியான ஒத்திசைவில் இருந்தான். நீங்கள் யாரோ ஒருவரிடம் ஒத்திசைவாக உணர்ந்தால் மட்டும்தான், அவர்களது இருப்பில் நீங்கள் இனிமையை உணர்வீர்கள். இல்லையெனில், அங்கே ஒருவிதமான அசௌகரியம் இருக்கக்கூடும்.
கிருஷ்ணன் ஷியாம சுந்தரன் என்று அறியப்பட்டான். அவன் அந்தியின் ஒளி போல இருந்தான். சூரியன் மறையத் தொடங்கும்போது, பகல்வானத்தின் மெல்லிய நீலம், ஒரு அடர்ந்த நீலத்துக்கு வழிவிடுகிறது, கருநீலம் – அதுதான் அவனது நிறம்.
கிருஷ்ணனின் குழந்தைப் பருவக் காதலி, ராதை. “கிருஷ்ணன் எப்பொழுதும் என்னுடன் இருக்கிறான். அவன் எங்கிருந்தாலும், அவன் யாருடன் இருந்தாலும், அப்போதும் அவன் என்னோடுதான் இருக்கிறான்”, என்று கூறுமளவுக்கு ராதையின் புரிதலுணர்வு இருந்தது.
கிருஷ்ணனின் இளங்காளைப் பருவம்
அவனது புல்லாங்குழலினால், கிருஷ்ணன் எவரையும், விலங்குகளையும்கூட கரைந்துருகி, மெய்மறக்கச் செய்து வசியப்படுத்தக்கூடியவனாக இருந்தான். ஆனால் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அவன் கிராமத்தை விட்டுச் சென்றபோது, அவன் தனது குழலை ராதையிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். அதன்பிறகு மீண்டும் அவன் ஒருபோதும் குழல் இசைக்கவில்லை. அந்த நாள் முதல், கிருஷ்ணனைப்போல ராதை குழலிசைத்தாள்.
கிருஷ்ணன் – எப்போதும் பட்டாடைகளை, கிரீடம் மற்றும் மயில் இறகுகளுடன் அழகுற அணிந்திருந்தவன் – ஒரு மான்தோல் கச்சை மட்டும் உடுத்திக்கொண்டு, அவனது புதிய சாதனாவுக்கு நூறு சதவிகிதம் அர்ப்பணிப்புடையவனாக, ஒரு முழுமையான பிரம்மச்சாரியாக உருமாறினான். இவ்வளவு பிரகாசமான யாசகனை இதற்கு முன்னர் உலகம் ஒருபோதும் கண்டதில்லை.
கிருஷ்ணனின் குரு சாந்திபானி, கற்றுக்கொடுப்பதற்கு அவரது வாயைத் திறக்கவேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. உள்நிலையிலேயே அனைத்தும் தெரிவிக்கப்பட்டது, கிரகிக்கப்பட்டது மற்றும் சித்திக்கப் பெற்றது.
கிருஷ்ணன் கோவர்த்தன மலைமீது ஏறியபோது ஒரு கிராமத்து விளையாட்டுப் பிள்ளையாகச் சென்றான். ஆனால் கீழே வரும்போது அவனிடம் வேறொரு விதமான கண்ணியம் இருந்தது. மக்கள் அதிர்ச்சியுடன் அவனைக் கண்டனர். அப்போதும் அவன் அவர்களைக் கண்டு புன்னகைத்தான், ஆனால் அவன் கண்களில் அன்பு இல்லை - ஆழமும் தொலைநோக்குப் பார்வையும் இருந்தது.
தர்மகோப்தா – நீதி, நேர்மையின் பேரரசன்
தர்மம் மற்றும் நீதியின் பேரரசன், தர்மகோப்தா என்று கிருஷ்ணன் ஏற்றுக்கொள்ளப்பட்டான். கிருஷ்ணனுக்கு அரசாள்வதற்கான ஆற்றலும், திறனும் இருந்தபோதிலும், அவன் ஒருபோதும் எந்த இராஜ்ஜியத்தையும் ஆட்சி செய்யவில்லை.
அவனது வாழும் காலத்திலும், இப்போதும்கூட, பலரும் கிருஷ்ணனை ஒரு ஏமாற்றுக்காரன், போலியானவன், அல்லது புன்னகைக்கும் மோசக்காரன் என்று அழைத்தனர் – ஏனென்றால் அவன் அந்த நாட்களின் ஒழுக்க விதிமுறைகளைப் பின்பற்றவில்லை; ஒரு சூழலுக்குப் பொருத்தமான விளைவை ஏற்படுத்துவது என்னவாக இருந்தாலும், அதைத்தான் அவன் செய்தான்.
கோவிந்தன் – கிருஷ்ணன் உச்சபட்ச சாத்தியம்
கிருஷ்ணனின் பரமவிரோதிகள்கூட, தங்களையறியாமல் அவனுடன் அமர்ந்து, அவனை உள்வாங்குமளவுக்கு கிருஷ்ணனின் இணைத்துக்கொள்ளும் தன்மை இருந்தது. அவனைத் தூற்றி, கொல்வதற்கு சதிசெய்தவர்களை, எத்தனை முறைகள் வேண்டுமென்றாலும், கிருஷ்ணன் சிரமமின்றி மாற்றத்துக்கு உள்ளாக்கினான்.
மக்கள் கிருஷ்ணனிடம், “ஓ குருவே! தாங்களே மீட்பவர் என்று பலரும் கூறுகின்றனர். ஆகவே எங்களுக்கான வழி என்ன”, என்று கேட்டபோது, கிருஷ்ணன் அவர்களை நையாண்டியாகப் பார்த்து கூறினான், “என்ன வழி? நானே வழி”.
கிருஷ்ணன் மக்கள் மீது எல்லாவித குறும்புத்தனங்களையும் பிரயோகித்தபோதிலும், ஒவ்வொருவரும் அவனை அன்பு செய்துகொண்டுதான் இருந்தனர், ஏனென்றால் அவன் அவர்களுடனும் மற்றும் அவனைச் சுற்றிலுமிருந்த எல்லா உயிர்களுடனும் பரிபூரணமான ஒத்திசைவில் இருந்தான்.
“ராதை” என்ற சொல்லுக்கு, வாழ்வின் சாரத்தை அல்லது காதலை வழங்கும் ஒருவர் என்பது பொருள். அவளது காதலில், ராதை தன் கிருஷ்ணனை, அவளுடைய ஒரு பாகமாகவே இணைத்துக்கொண்டாள். ராதை இல்லாமல் கிருஷ்ணன் இல்லை. மாறாக, கிருஷ்ணன் இல்லாமல் ராதை இல்லை என்பது கிடையாது என்றே கூறுகின்றனர். ராதாகிருஷ்ணன் அல்லது ராதேயன்.
பெண்தன்மை என்பது ஒருவிதமான தன்மை; அது ஒரு பெண்ணிடத்தில் இருப்பதைப்போல், ஒரு ஆணுக்குள்ளும் உயிர்ப்புடன் இருக்கமுடியும். நீங்கள் கிருஷ்ணனை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், நீங்கள் முற்றிலும் பெண்தன்மையாக இருப்பதற்கு சம்மதிக்க வேண்டும். இது, எதையும் விலக்கிவைக்காத, அன்யோன்யம் மற்றும் அதீத உணர்ச்சித்துடிப்பின் பாதை.
கிருஷ்ணன் ஏதோ ஒன்றைச் செய்ய விரும்பினால், மற்றவர்கள் என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல், அது எப்படிச் செய்யப்பட வேண்டுமோ அப்படித்தான் செய்வான், சமுதாயத்துக்கு மத்தியில், ஒரு இயல்பான தலைவனாக அவனை உருவாக்கிய இப்படிப்பட்ட பல சம்பவங்கள் அவனது வாழ்க்கையில் நேர்ந்தன.
பாண்டவர்கள் முற்றிலும் அப்பழுக்கற்றவர்கள் என்றோ, கௌரவர்கள் முற்றிலும் தீயவர்கள் என்றோ கிருஷ்ணன் நம்பவில்லை. அவன் யாரைப் பற்றியும், சரி–தவறு என்ற தீர்ப்புகளை உருவாக்கும், ஒழுக்கம் சார்ந்த ஒரு நபர் அல்ல.
கிருஷ்ணன் சிலருடன் மிகவும் கருணையோடு இருந்தான், மற்றும் சிலருடன் முற்றிலும் இரக்கமற்றவனாக இருந்தான். அவன் ஏதோ ஒன்றைச் செய்யவேண்டிய நிலை உருவானபோது, கொல்வது மற்றும் பேணிக்காப்பது இரண்டையும் செய்தான். அவனுக்கென்றே உரித்தான கொள்கை எதுவும் இல்லாததால், வாழ்க்கையை எந்தவிதமாக அணுகவேண்டுமோ அப்படி அணுகினான். அவன் உயிராக மட்டும் இருந்தான்.
கிருஷ்ணனை நாம் ஒரு மனிதனாக அல்ல, ஒருவிதமான விழிப்புணர்வாகக் குறிப்பிடுகிறோம்.
கிருஷ்ணன் இறைமையின் ஒரு வெளிப்பாடாக இருப்பதால், மக்களின் பிரச்சனைகளை அவனது விரல்களின் ஒரு சொடக்கில் ஏன் கையாளமுடியவில்லை என்று உத்தவன் ஒருமுறை கிருஷ்ணனிடம் கேட்டான். கிருஷ்ணன் புன்னகை தவழக் கூறினான், “பெறுபவர் முழு நம்பிக்கையில் இருந்தால்தவிர, யாரும் அற்புதம் நிகழ்த்தமுடியாது”.
அவன் வாழும் காலத்தில், கிருஷ்ணன் தன்னியல்பிலேயே பலரிடம் நம்பிக்கையை உருவாக்கினான், ஆனால் அப்போதும், அவன் யாராக இருந்தானோ அதற்குத் தகுந்தாற்போல், போதுமான அளவில் நம்பிக்கை வளரவில்லை. அது எப்போதும் அப்படித்தான் இருந்துள்ளது – மகத்தானவர்கள் வந்தபோது, மகத்தான விஷயங்கள் நிகழவில்லை, ஏனென்றால் அவர்கள் மிக நீண்ட தூரம் முன்னோக்கி இருந்தனர்.
குறிப்பு: பாரதத்தின் மாபெரும் இரு இதிகாசங்களில் ஒன்றான மஹாபாரதம் கதையை அனைவருக்கும் புரியும் எளிமையான நடையிலும், அதன் ஆன்மீக சாரம் மாறாமலும் சத்குரு அவர்கள் விளக்குகிறார். மஹாபாரதம் தொடரின் அனைத்து பதிவுகளும் இங்கே...