4 அரிய கிருஷ்ணன் கதைகள் (Krishna Stories in Tamil)
கிருஷ்ணனின் வாழ்க்கையிலிருந்து அரிதாகக் கேள்விப்பட்ட 4 கதைகள் இங்கே உங்களுக்காக!
4 சுவாரஸ்யமான கிருஷ்ணன் கதைகள்
கதை #1 – துரியோதனனுடைய மனைவி ஒரு கிருஷ்ண பக்தையாகிறாள்
சத்குரு: பானுமதி, துரியோதனனின் மனைவி. அவள் ஒரு அதிரூபசுந்தரப் பெண்ணாக இருந்தாள். கிருஷ்ணன் துரியோதனனுடைய விருந்தினராக அரண்மனையில் இருந்தபொழுது, அவளுக்குப் பதினேழு வயது மட்டுமே ஆகியிருந்தது.துரியோதனன், கிருஷ்ணனை சிறிது மது அருந்தச்செய்து, அவனிடமிருந்து ஏதோ உறுதிமொழி பெறுவதற்காக ஒரு சதித்திட்டம் தீட்டினான். அவன் எல்லா விதமான ஏற்பாடுகளையும் செய்து, விருந்தில் போதுமான அளவு மது இருக்குமாறு உறுதி செய்துகொண்டான். துரியோதனனுடைய நண்பர்கள் வருகைதந்து, ஒவ்வொருவரும் அதிகமாகக் குடித்து, அவர்கள் அனைவரும் கட்டுப்பாடிழந்து போயினர். ஆனால் கிருஷ்ணன் மிக அமைதியாக இருந்துகொண்டு, ஒவ்வொருவரையும் கவர்ந்துகொண்டிருந்தான்.
இந்த முழுமையான உற்சாகத்தில், பானுமதியும் அவள் அருந்தவேண்டிய அளவைக்காட்டிலும் அதிகமாக எடுத்துக்கொண்டாள். அவள் இளம்பெண்ணாக இருந்ததுடன், இந்த விஷயங்களுக்குப் பழக்கமில்லாததால், அவள் மிகவும் நிலையிழந்து தடுமாறினாள். சிறிது நேரம் கழித்து, அனைவரும் தள்ளாடிய நிலையில், விஷயங்கள் கட்டுக்கடங்காமல் சென்றன.
பானுமதி தன்மீதே கட்டுப்பாட்டை இழந்துவிட்டாள். அவள் அப்படியே கிருஷ்ணன் மீது சரிந்து விழுந்தபடி, அவனுக்கான அவளது ஆசையை வெளிப்படுத்தத் தொடங்கினாள். கிருஷ்ணன் சட்டென்று ஒரு குழந்தையை ஏந்துவது போல் அவளை ஏந்திக்கொண்டான். ஒட்டுமொத்த சூழலும் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்பதை அவன் கண்டுகொண்டான். இந்த நிலைமையில் அவள் ஏதோ ஒன்றைச் செய்தால், பிறகு அவளால் அதைக் கையாளமுடியாது என்று புரிந்துகொண்டான். அஸ்தினாபுரத்தின் அரசியான அவள், ஒரு வழியாக ஆகி விடுவாள்.
ஆகவே, அவன் அவளைச் சுமந்துகொண்டு, அரண்மனைக்குள் எடுத்துச் சென்று, அவளது மாமியாரான காந்தாரியின் கைகளில் பானுமதியை ஒப்படைத்தான். அடுத்த நாள் காலை, இதைச் செய்ததற்காக அவனுக்கு பானுமதி மிகுந்த நன்றியுணர்வுடன் இருந்தாள். அப்போதிருந்து, அவள் கிருஷ்ணனின் பக்தையாகிவிட்டாள்.
கதை #2 – கிருஷ்ணனின் கர்வம் மிகுந்த மனைவி
சத்குரு:கிருஷ்ணனின் இரண்டாவது மனைவி சத்யபாமா, மிகுந்த கர்வம் கொண்ட பெண். அவள் தன்னை மிகுந்த அழகானவள் மற்றும் செல்வம் படைத்தவள் என்று நம்பினாள், ஏனென்றால் அவளது தந்தை அதீத பணக்காரராக இருந்ததுடன், அவள் விரும்பிய எல்லா வளமும், ஆபரணங்களும் அவளிடம் இருந்தன. கர்வம் அவளது பிரச்சனைகளுள் ஒன்று.ஒருமுறை, கிருஷ்ணனின் பிறந்த நாளன்று, அவள் கிருஷ்ணனை எவ்வளவு நேசிக்கிறாள் என்பதை அனைவருக்கும் காண்பிக்க முடிவெடுத்தாள். கிருஷ்ணனின் எடைக்கு எடை தங்கத்தை அந்த நகரமக்களுக்கு வினியோகம் செய்ய விரும்பினாள். இது துலாபாரம் என்று அழைக்கப்படுகிறது. இது கோவில்களில் நிகழ்வது. மக்கள் எடைத்தராசில் அவர்களையே எடைபார்த்து, தங்களின் எடைக்கு சமமான வெண்ணெய், நெய் அல்லது அரிசியை மற்றவர்களுக்கு வழங்குகின்றனர். அரிசி, உப்பு, பருப்புகள், தங்கம் அல்லது உங்களால் இயன்ற எதையும் நீங்கள் வழங்கமுடியும். இது கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்தது.
Subscribe
சத்யபாமா துலாபாரம் அமைத்தாள். இதனால் மக்கள் அனைவரும் ஈர்க்கப்பட்டனர், ஆனால் இந்த விஷயங்களால் கிருஷ்ணன் கவரப்படவில்லை. அவன் நடந்து சென்று துலாபாரத்தில் அமர்ந்தான். அவனுடைய எடை என்னவென்பதை சத்யபாமா ஓரளவுக்கு அறிந்திருந்ததால், அந்த அளவுக்கான தங்கத்தைத் தயாராக வைத்திருந்தாள். ஆனால் அவள் தராசில் தங்கத்தை வைத்தபோது, அது சிறிதளவுகூட நகரவில்லை.
இதேபோன்ற ஒரு சம்பவம், கிருஷ்ணன் குழந்தையாக இருந்தபோது நிகழ்ந்தது. ஒரு ராக்ஷசன் வந்து, அவனைத் தூக்கிச் செல்வதற்கு முயன்றான். அப்போது கிருஷ்ணன் அளவுகடந்து கனத்துப்போனதில், ராக்ஷசன் நிலைகுலைந்துவிட, கிருஷ்ணன் அவன்மீது ஏறி, அவனை நசுக்கிவிட்டான். கிரியா யோகத்தில், ஒரு யோகியால் தனது எடையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ இயலும்படியான ஒரு வழி உள்ளது. ஒரு மலைக்கு சமமாக தமது எடையை அதிகரித்துக்கொண்ட யோகிகளைப்பற்றிய பல கதைகள் உண்டு.
கிருஷ்ணன் அவனது எடையை அதிகரித்துக்கொண்டு, துலாபாரத்தில் அமர்ந்தான். அவனது எடையை ஈடுசெய்யும் என்று சத்யபாமா நினைத்த எல்லா தங்கத்தையும் துலாபாரத்தின் மற்றொரு தட்டில் வைத்தாள், ஆனால் அது ஈடேறவில்லை. இதற்குள், நகரமக்கள் அனைவரும் இதைக் காண வந்துவிட்டிருந்தனர். பிறகு அவள் பணியாட்களிடம், அவளிடமிருக்கும் எல்லா ஆபரணங்களையும் எடுத்து வருமாறு கூறினாள். தனது ஆபரணங்கள் ஈடு செய்யும் என்ற நம்பிக்கையில் அவள் ஒவ்வொன்றாக துலாபாரத்தில் வைத்தாள். அவளிடமிருந்த எல்லாவற்றையும் அவள் வைத்துவிட்டாள், ஆனால் துலாபாரத்தின் முள் நகரவில்லை.
அவள் விசும்பி அழத் தொடங்கினாள். ஏனென்றால் இது அவளுக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. இந்தச் சடங்குக்காக நகரம் முழுவதும் அங்கே கூடியிருந்தது, ஆனால் அவளிடம் போதிய தங்கம் இல்லை. தனது அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் குறித்து எப்போதும் கர்வம் கொண்டிருந்த ஒருவரிடம் போதுமான தங்கம் இல்லை என்றதும் என்ன செய்வது என்று தெரியவில்லை.
அதன்பிறகு அவள் ருக்மிணியைப் பார்த்தாள். சத்யபாமா எப்போதும் சிறிது பொறாமையும், பிரச்சனையும் கொண்டிருந்த ஒரு நபர்தான் ருக்மிணி. அவள் ருக்மிணியிடம், “நான் என்ன செய்யவேண்டும்? இந்த அவமானம் எனக்கு மட்டுமானதல்ல, இது உனக்கும், அனைவருக்குமானது. என்ன செய்வது?”, என்று கேட்டாள். ருக்மிணி சென்று, வெளியிலிருந்த துளசிச் செடியிலிருந்து மூன்று இலைகளை மட்டும் எடுத்து, துலாபாரத்தில் வைத்தாள். கிருஷ்ணன் இருந்த தட்டு மேலே சென்றுவிட்டது!
கதை #3 – கிருஷ்ணனின் பாதி – பக்தன்
சத்குரு: ஒரு நாள் கிருஷ்ணன் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு உணவு பரிமாறுவதில் சத்யபாமா மிகுந்த பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தாள். ஏனென்றால் தினமும் வீட்டுக்கு வருகையளிக்கும் நபரல்ல அவன். ஆகவே அவள் அதனை மிகுதியான மகிழ்ச்சியும், ஆனந்தமுமாகச் செய்துகொண்டிருந்தாள்.ஆனால் உணவின் நடுவே, கிருஷ்ணன் திடீரென்று எழுந்துகொண்டு, அவனது கைகளைக்கூடக் கழுவாமல், வாசலை நோக்கி ஓடத் தொடங்கினான். சத்யபாமா திகைத்துப்போனாள். “என்ன இது? தயவுசெய்து உணவை முடித்துக்கொண்டு செல்லுங்கள்”, என்றாள். கிருஷ்ணன், “இல்லை, நான் அவசியம் செல்லவேண்டும்”, என்றவாறு வெளிக்கதவை நோக்கி ஓடினான்.
ஆனால் பிறகு, அவன் திரும்பி வந்து, அவனது உணவை சாப்பிட கீழே அமர்ந்தான். அப்போது அவள், “நீங்கள் ஏன் இப்படி ஓடிவிட்டு, பிறகு திரும்பி வந்தீர்கள்? என்ன இது?” என்று கேட்டாள். அதற்கு அவன் “என் பக்தன் ஒருவன் காட்டில் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவனது சுவாசமே ‘கிருஷ்ணா, கிருஷ்ணா, கிருஷ்ணா’ என்றாகியிருந்தது. அப்போது பசியில் இருந்த புலி ஒன்று அவனை நெருங்கி வந்ததை நான் கண்டேன், ஆகவே நான் செல்ல வேண்டியிருந்தது. நான் வாசல் வரை சென்றேன், ஆனால் பிறகு, அந்த முட்டாள் எழுந்து, ஒரு கல்லை எடுத்தான், ஆகவே நான் திரும்பிவிட்டேன். அதனை அவனாகவே கையாளட்டும்” என்று கூறினான்.
கதை #4 – கிருஷ்ணனின் தலைவலிக்கு நிவாரணம்
சத்குரு:ஒருமுறை, கிருஷ்ணனின் பிறந்த நாளன்று நடனம், இசை மற்றும் சந்தோஷங்களுடன் மிகப்பெரிய கொண்டாட்டத்துக்கான முன்னேற்பாடு நடந்தது. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடியிருந்தனர். ஆனால் கிருஷ்ணன் பங்கேற்க விரும்பாமல், வீட்டிலேயே அமர்ந்துவிட்டான். எந்த விதமான கொண்டாட்டத்துக்கும் கிருஷ்ணன் எப்போதும் பங்கேற்கும் விருப்பத்துடன் இருப்பவன். ஆனால் அன்றைக்கு, எப்படியோ அவன் விருப்பமில்லாமல் இருந்தான்.ருக்மிணி வந்து அவனை, “என் தலைவனே, உங்களுக்கு என்ன நிகழ்ந்துவிட்டது? இது என்ன? நீங்கள் கொண்டாட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை?” என்று கேட்டாள். கிருஷ்ணன், “எனக்கு தலைவலியாக உள்ளது” என்றான். அவனுக்கு உண்மையாக அப்படி இருந்ததா, இல்லையா என்பது நமக்குத் தெரியவில்லை! அவனுக்கு தலைவலி இருந்திருக்கலாம். ஆனால் அப்படி நடிப்பு போடவும் அவன் திறன் கொண்டவன்.
கிருஷ்ணன், “என்னை உண்மையிலேயே நேசிக்கும் யாராவது ஒருவர், அவர்களது பாதம்பட்ட மண்ணை சிறிதளவு எடுத்து, அதை என் தலை மீது தேய்க்க வேண்டும். தலைவலி சரியாகிவிடும்” என்று கூறினான்.
“நாம் மருத்துவரை அழைப்போம்”, என்றாள் ருக்மிணி. மருத்துவர்கள் வந்தனர். அவர்கள் கிருஷ்ணனுக்கு வெவ்வேறு மருந்துகள் கொடுக்க முயற்சித்தனர். கிருஷ்ணன், “இல்லை, இந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு வேலை செய்யாது” என்று கூறினான். பிறகு மக்கள், “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டனர். இதற்குள் நிறைய மக்கள் அந்த இடத்தில் கூடிவிட்டனர். சத்யபாமா வந்துவிட்டாள். நாரதர் வந்து, “என்ன நிகழ்ந்தது, என்ன நிகழ்ந்தது?” என்றார். கிருஷ்ணனுக்கு ஒருவித தலைவலி உள்ளது, நாம் என்ன செய்யவேண்டும்?” என்று அனைவரும் பரபரத்தனர்.
கிருஷ்ணன், “என்னை உண்மையாகவே நேசிக்கும் யாரேனும், உங்கள் பாதம்பட்ட மண்ணை சிறிது எடுத்து என் தலைமீது தேய்க்கவேண்டும். அப்போது என் தலைவலி சரியாகிவிடும்” என்று கூறினான். சத்யபாமா, “என்ன முட்டாள்தனம்! நான் உங்களை நேசிக்கிறேன், ஆனால் என் பாதம்பட்ட மண்ணை எடுத்து உங்கள் தலைமீது தேய்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. அப்படிப்பட்ட விஷயங்களை நாங்கள் செய்யமுடியாது” என்றாள். ருக்மிணியும், “நாங்கள் எப்படி இதைச் செய்யமுடியும்? இது தெய்வக்குற்றம். இதனை எங்களால் செய்யமுடியாது” என்று அழுதாள். நாரதரும் பின்வாங்கினார், “அப்படிப்பட்ட விஷயங்களை நான் செய்ய விரும்பவில்லை. நீங்களே பரம்பொருளாக இருக்கிறீர்கள். இதில் என்ன உட்பொருள் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. இது என்ன வலை என்பது நமக்குத் தெரியவில்லை. என் பாதமண்ணை எடுத்து உங்கள் தலைமீது வைத்துவிட்டால், நிரந்தரமாக நான் நரகத்தில் எரியக்கூடும். அப்படிப்பட்ட விஷயங்களை நான் செய்வதற்கு விரும்பவில்லை.”
இந்த செய்தி வாய்வழியாக பரவியது. அனைவரும் திகிலடைந்தனர். “நாங்கள் அப்படிப்பட்ட விஷயங்களைச் செய்யப் போவதில்லை. நாங்கள் கிருஷ்ணனை நேசிப்பது சரிதான், ஆனால் அப்படி ஒரு விஷயத்தைச் செய்வதனால் நாங்கள் நரகத்துக்குச் செல்ல விரும்பவில்லை.”கிருஷ்ணன் வருவதற்காக கொண்டாட்டம் காத்திருந்தது, ஆனால் கிருஷ்ணன் தலைவலியுடன் அங்கே அமர்ந்துகொண்டிருந்தான்.
பிறகு, இந்த செய்தி பிருந்தாவனத்துக்குச் சென்றது. கிருஷ்ணனுக்கு தலைவலி என்பது கோபியருக்குத் தெரியவந்தது. இதைக் கேட்டதும் ராதை அவளது ஆடையின் முந்தானையை எடுத்து, மண் மீது பரப்ப, எல்லா கோபியரும் அதன் மீது ஆவேசமாக நடனமாடினார்கள். அதை நாரதரிடம் கொடுத்து, “இதை எடுத்துச் சென்று, அவன் தலையைச் சுற்றிக் கட்டிவிடுங்கள்”, என்றனர். நாரதரும் அதை எடுத்துவந்து, கிருஷ்ணனின் தலையைச் சுற்றிக் கட்டினார். கிருஷ்ணன் குணமாகிவிட்டான்!
அவன் எதை அதிகமாக மதித்தான் என்பதை எப்போதும் தெளிவுபடுத்துபவனாகவே இருந்தான். அவன் அரசர்களுக்கிடையே பழகியபோதிலும், ராஜாங்கங்கள் அவனுக்கு வழங்கப்பட்டபோதிலும், அவன் அதை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இது அவனுக்கு மதிப்பு மிகுந்ததாக இருந்தது.
குறிப்பு:
கிருஷ்ணன் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான கதைகள் இங்கே...