மஹாபாரதம் தொடர் - 3 : சாபமா வரமா?
கடந்த பகுதியில், சுக்கிராச்சாரியாரிடம் சஞ்சீவினி மந்திரத்தை கற்க அசுரர் குழுவில் கச்சன் "ஊடுருவியதை" பார்த்தோம். சுக்கிராச்சாரியாரின் மகளான தேவயானி கச்சன் மீது காதல் கொள்கிறாள். தேவயானியை விலக்கிவிட்டு தன் வழியே செல்கிறான் கச்சன். இனி..
தேவயானியும் சர்மிஷ்தாவும்
சத்குரு:
Subscribe
தேவயானியின் நெருங்கிய தோழியாக சர்மிஷ்தா இருந்தாள். அந்தப் பகுதியின் அசுரர்களின் அரசனாக இருந்த விரிக்ஷபர்வாவின் மகள் இளவரசி சர்மிஷ்தா. இளம் பெண்கள் இருவரும் ஒருநாள் குளிப்பதற்கு அருகில் இருந்த நதிக்குச் சென்றார்கள். இந்த நதிக்கரையில்தான் கௌரவர் குலம் பிறப்பதற்கான காரணம் வேர் பிடித்தது. தேவயானியின் தந்தையான சுக்கிராச்சாரியார் பூஜைகளை நடத்துபவராக இருந்ததால் அவர் அந்தணர் குலத்தை சேர்ந்தவராகிறார். அப்போதைய சமுதாய அமைப்பில் அந்தணர்கள் உயர்குலமாக கருதப்பட்டார்கள். இதனாலேயே நதியில் குளிப்பதற்கு முன், தோழிகள் இருவரும் தங்களது ஆடை ஆபரணங்களை தனித்தனியாக நதிக்கரையில் வைத்தனர். அவர்கள் நதியில் இறங்கி விளையாடிக்கொண்டிருந்தபோது வேகமாக அடித்த காற்றில் கரையில் இருந்த அவர்களது உடைமைகள் ஒன்றாக கலந்தது.
மகாபாரதம் கதை முழுவதிலும் பல சாபங்களும் வரங்களும் கொடுக்கப்படுகிறது. ஆனால் எது வரம், எது சாபம் என்பது உங்களுக்கு தெரியாது. வரமே சாபமாகவும், சாபமே வரமாகவும் மாறும் வினோதத்தை தன்விருப்பத்தில் வைத்திருக்கிறது வாழ்க்கை.
நதியில் நீராடி வெளியே வந்ததும் உடையணியும் இயல்பான அவசரத்தில் சர்மிஷ்தா தேவயானியின் ஆடைகளில் ஒன்றை கவனமின்றி அணிந்து கொண்டாள். இதை பார்த்த தேவயானி, கொஞ்சம் கிண்டலாகவும், அதேசமயம் தானே உயர்ந்தவள் எனும் தொனியிலும், "இது என்ன.. உன் தந்தையின் குருவின் மகளது உடையை நீ உடுத்தி இருக்கிறாய்.. எப்படி இருக்கிறது.. இது உனக்கே சரியாக படுகிறதா..?" என்றாள். தன் தவறை உணர்ந்தாள் சர்மிஷ்தா. ஆனால் இளவரசி அல்லவா.. ஆத்திரத்துடன் "உன் தந்தை ஒரு பிச்சைக்காரன். என் தந்தையின் முன் வணங்கி நின்று கையேந்தி வாங்கிவரும் தர்மத்தில்தான் உங்கள் வாழ்க்கை நடக்கிறது. நீ யார் என்பது உனக்கு நினைவிருக்கட்டும்" என்றவாறே தேவயானியை தள்ளினாள் சர்மிஷ்தா. இதை எதிர்பார்க்காத தேவயானி நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் விழ, தேவயானியை அப்படியே விட்டுவிட்டு வேகமாக அங்கிருந்து கிளம்பினாள் சர்மிஷ்தா.
வீட்டிற்கு வந்ததும் தன் தந்தையின் மடியில் விழுந்து அழுதுகொண்டே நடந்ததை சொல்லி "இந்த இளவரசிக்கு நீங்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்" என்றாள் தேவயானி. தன் மகளை அவமதித்தற்காக தன் மகளிடமே பணிப்பெண்ணாக இளவரசி இருக்கவேண்டும் என்று நிர்பந்தித்தார் சுக்கிராச்சாரியார். அரசனுக்கு மறுக்க வழியே இல்லாமல் போனது. இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சுக்கிராச்சாரியார் இல்லாமல் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த அரசன் சம்மதித்தான். மகாபாரதம் கதை முழுவதிலும் பல சாபங்களும் வரங்களும் கொடுக்கப்படுகிறது. ஆனால் எது வரம், எது சாபம் என்பது உங்களுக்கு தெரியாது. வரமே சாபமாகவும், சாபமே வரமாகவும் மாறும் வினோதத்தை தன்விருப்பத்தில் வைத்திருக்கிறது வாழ்க்கை. தேவயானியின் பணிப்பெண்ணாகும் சாபம் சர்மிஷ்தாவிடம் சேர்ந்தது. தேவயானிக்கு யயாதியுடன் திருமணம் நடந்தது. தான் குடிபுகப்போகும் வீட்டிற்கும் தன்னுடைய பணிப்பெண்ணாக சர்மிஷ்தா உடன் வரவேண்டும் என அடம்பிடித்தாள் தேவயானி.
ஏற்கனவே பழி தீர்த்துக்கொண்ட தேவயானி, சர்மிஷ்தாவை அப்படியே விட்டுவிட்டு வந்திருக்கலாம். ஆனால் இன்னும் கொஞ்சம் காயப்படுத்தி பார்க்க நினைத்தாள் தேவயானி. எனவே புகுந்த வீட்டிலும் பணிப்பெண்ணாக சர்மிஷ்தாவே வேண்டும் என்று அழைத்து வரப்பட்டாள். யயாதியும் தேவயானியும் கணவன் மனைவியாக வாழத் துவங்கினர். அவர்களுக்கு யாது என்று ஒரு மகன் பிறந்தான். யாதவர்கள் இந்த யாதவ குலத்தின் வழித்தோன்றல்களே.
ஏற்கனவே பழி தீர்த்துக்கொண்ட தேவயானி, சர்மிஷ்தாவை அப்படியே விட்டுவிட்டு வந்திருக்கலாம். ஆனால் இன்னும் கொஞ்சம் காயப்படுத்தி பார்க்க நினைத்தாள் தேவயானி.
தேவயானியின் பணிப்பெண்ணாக இருந்தாலும், இளவரசியான சர்மிஷ்தா எப்போதும் ஒருவித கண்ணியத்துடன் நடந்து கொண்டாள். நடையுடையிலும் தேவயானியைவிட தன் மீதே ஈர்ப்பு இருக்கும்படி தன்னை அமைத்துக்கொண்டாள். விளைவு.. சர்மிஷ்தா மீது காதலில் விழுந்தான் யயாதி. ரகசியமான இவர்கள் காதலில் கௌரவ குலத்தின் முன்னோர்களில் ஒருவரான புரு பிறந்தான். யயாதியின் முதல் பிள்ளையான யது இயற்கையாக மன்னனாக முடிசூடியிருக்க வேண்டும். ஆனால் யயாதியின் மனம் கசந்தபடி அவன் நடந்துகொண்டதால் யதுவிற்கு அரசபதவி மறுக்கப்பட்டது. தன் மகளை ஏமாற்றத்திற்குள்ளாக்கி, யயாதிக்கும் பணிப்பெண்ணுக்கும் குழந்தை பிறந்ததை அறிந்தார் சுக்கிராச்சாரியார். "உன் இளமை இப்போதே முடிந்து போகட்டும்" என்று யயாதிக்கு சாபமிட்டார். எனவே இளமை தொலைந்து மூப்படைந்த முதியவன் ஆனான் யயாதி.
திடீரென தனக்கு முதுமை ஏற்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தான் யயாதி. யது வளர்ந்து வாலிபனானதும் யயாதி, "உன் இளமையை சில வருடங்களுக்கு எனக்கு கொடு. நான் சந்தோஷமாக இருந்துவிட்டு மீண்டும் உன்னிடமே திரும்ப கொடுத்து விடுகிறேன்." என்று கேட்டான். யது, "இதுவரை நீ செய்ததே போதும். முதலில் என் தாயை ஏமாற்றினாய், இப்போது என் இளமையை என்னிடம் இருந்து பெற்று ஏமாற்ற நினைக்கிறாய். முடியாது" என தீர்க்கமாக கூறினான். "உன்னால் அரசனே ஆக முடியாது" என்று யதுவுக்கு சாபமிட்டான் யயாதி. யயாதியின் இரண்டாவது மகனாக சர்மிஷ்தா மூலமாக பிறந்த புரு தானாக முன்வந்து, "தந்தையே என் இளமையை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு எந்தவிதத்திலும் இளமை பெரிதாக தெரியவில்லை" என்று தன் இளமையை கொடுத்தான். மீண்டும் இளமையானவனாக சிலகாலம் வாழ்ந்தான் யயாதி. பின் இளமையை திருப்பி கொடுத்துவிட்டு, புருவை அரசனாக தன் அரியணையில் அமர்த்தினான்.
மஹாபாரதம் - 1 : பிரகஸ்பதியின் சாபமும் தாராவின் குழந்தையும்
மஹாபாரதம் - 2: உதயமாகிறது சந்திரவம்சம்
ஆசிரியர் குறிப்பு : சத்குருவின் பார்வையிலிருந்து மஹாபாரதக் கதை... ஒரு நெடுந்தொடராக எதிர்வரும் நாட்களில் பதிவிடப்பட உள்ளது! அழகியலும் கலைநயமும், பண்பாடும் கலாச்சாரமும், வாழ்வியலும் அரசியலும், தந்திரமும் தெய்வீகமும் ஒன்றாக இணைந்த ஒரு மாகாவியமான மகாபாரத கதையை ஞானியின் பார்வையிலிருந்து படித்து மகிழுங்கள்!