சந்தோஷத்தை எப்படி அடைவது?
சினிமா நட்சத்திரம் விஜய் தேவரகொண்டா, சந்தோஷம் பற்றிய உண்மையை சத்குருவிடம் கேட்கிறார். மனித அனுபவத்தின் ரசாயன அடிப்படையை விளக்கும் சத்குரு, “நீங்கள் விரும்பும் விதமான ரசாயனத்தை உருவாக்க ஒரு தொழில்நுட்பமே உள்ளது, அதுதான் உள்நிலை தொழில்நுட்பம்” என்கிறார்.
விஜய் தேவரகொண்டா : வணக்கம் சத்குரு! இன்று நாங்கள் பணம் சந்தொஷம் தருமென எண்ணி கடினமாக உழைத்து சம்பாதிக்கிறோம். சந்தோஷம்தான் அதிகமாக சந்தைப்படுத்தப்படுகிறது. சந்தோஷத்தைத் தரும் என்றெண்ணி மது அருந்துகிறோம், சந்தோஷத்தைத் தருவாள் என்றெண்ணி ஒரு பெண்ணுடன் இருக்க விரும்புகிறோம். ஆனால் எது நம்மை சந்தோஷமாக வைத்திருக்கும்? இன்று சந்தோஷத்தை எங்கு கண்டறிவது என்றுகூட அறியாமல் இருக்கிறோம். எனவே சந்தோஷம் என்பது என்ன? சந்தோஷமான மனம் எப்படி இருக்கும்? சந்தோஷத்தை உள்ளே தேடுங்கள் என சொல்லாதீர்கள், அது எனக்கு வேலை செய்வதில்லை. எனக்கு உண்மையை சொல்லுங்கள்!
சத்குரு : நமஸ்காரம் விஜய்! சந்தோஷமான மனிதர் எப்படி இருப்பார்? நான் உங்களுக்கு எப்படித் தெரிகிறேன்? நாம் சந்தோஷத்தை ஏதோவொரு போகப்பொருள் போல பார்க்கிறோம், அல்லது ஒருவித சாதனை போல பார்க்கிறோம், அப்படியில்லை. உங்கள் உயிர் சௌகரியமான நிலைக்கு வரும்போது, சந்தோஷம் இயற்கையான விளைவு. நீங்கள் சௌகரியமான, இலகுவான நிலைக்கு வருவதென்றால் என்ன? இதை பலவிதங்களில் பார்க்கலாம். நான் உங்களை உள்முகமாகப் பார்க்க சொல்லக்கூடாது என்று நிபந்தனை போட்டுவிட்டீர்கள்.Subscribe
ஒவ்வொரு மனித அனுபவத்திற்கும் ஒரு ரசாயன அடிப்படை உள்ளது என்பது இன்று மருத்துவரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமைதி என்பது ஒருவித ரசாயனம், சந்தோஷம் என்பது இன்னொரு வித ரசாயனம், ஆனந்தம், துயரம், வேதனை, பரவசம் என ஒவ்வொன்றும் ஒருவித ரசாயனம்.
ஏதோவொன்று அல்லது யாரோவொருவரிடம் இருந்து சந்தோஷத்தை பிழிந்தெடுக்க முடியுமென்று நினைத்தால், நீங்கள் ஏமாற்றமடைவீர்கள், ஏனென்றால் எதிலிருந்தும் எதுவும் கிடைக்காது. உங்களுக்குள் பரவசத்தின் ரசாயனம் இருந்தால் மட்டுமே சந்தோஷம் இருக்கும்.
வேறுவிதமாகச் சொல்வதென்றால், நீங்கள் மிகவும் சிக்கலான ரசாயன ரசம். நீங்கள் ருசியான ரசமா, இல்லை மோசமான ரசமா என்பதுதான் கேள்வி! நீங்கள் ருசியான ரசமாக இருந்தால், உங்களுக்கு ருசியாக இருக்கும், வேறொருவருக்கு அல்ல! உங்களுக்கு நீங்களே ருசிகரமாக இருக்கும்போது, இங்கு அமர்ந்தாலே உங்களுள் மிக இனிமையாக உணர்வீர்கள், ஏனெனில் ரசம் அற்புதமாக உள்ளது, அப்போது மக்கள் நீங்கள் சந்தோஷமாக இருப்பதாக சொல்வார்கள். நீங்கள் மிகவும் சந்தோஷமானால், நீங்கள் ஆனந்தமாக இருக்கிறீர்கள் என்பார்கள். நீங்கள் மிகுந்த இனிமையானால், நீங்கள் பரவசமாக இருப்பதாக சொல்வார்கள்.
எனவே பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்ள இதை எளிமையாகச் சொன்னால், உங்கள் ரசாயன அமைப்பை மாற்றவேண்டும். நீங்கள் விரும்பும் ரசாயனத்தை உருவாக்க ஒரு தொழில்நுட்பமே இருக்கிறது. பரவசமான ரசாயனத்தை எப்படி உங்களுக்குள் உருவாக்குவதென நான் கற்றுக்கொடுத்தால், நீங்கள் ஆனந்தமாக இருப்பீர்கள். நீங்கள் ஆனந்தமாக இருக்கும்போது, சந்தோஷத் தேடுதலில் இருக்கமாட்டீர்கள். நாம் சந்தோஷத் தேடுதலில் இருப்பதுதான் மிகப்பெரிய தவறு. உங்கள் வாழ்க்கை உங்கள் சந்தோஷத்தின் வெளிப்பாடாக மாறவேண்டும். உங்கள் அனுபவத்தின் வெளிப்பாடாக உங்கள் வாழ்க்கை இருக்கும்போது, நீங்கள் என்ன செய்கிறீர்கள், என்ன செய்யவில்லை என்பது உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிர்ணயிக்காது. உங்களுக்குள் எப்படி இருக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும்.
"உங்களுக்குள்" எனும் வார்த்தையை மீண்டும் பயன்படுத்தியதற்கு மன்னித்துவிடுங்கள். ஆனால் ரசாயனம் என்பது உங்களுக்குள் இல்லை, அது இன்னும் உங்களுக்கு வெளியில்தான் இருக்கிறது. சரியான ரசத்தை எப்படி ருசியாக சமைப்பதென்று தெரிந்தால், சந்தோஷமாக இருப்பது ஒரு பிரச்சனையில்லை, அதன் இயற்கையான விளைவாக அது நடக்கும். எனவே உங்களுக்கு ஒரு தொழில்நுட்பம் கற்றுத்தர முடியும், வழிமுறை கற்றுத்தர முடியும், அதன்மூலம் உங்களுக்குள் சரியான ரசத்தை எப்படி உருவாக்குவதென அறிந்துகொள்வீர்கள். அதைத்தான் நான் 'உள்நிலை தொழில்நுட்பம்' என்கிறேன். உங்கள் இயல்பினாலேயே பரவசமாக இருக்கும்படி உங்கள் ரசாயனத்தை கட்டமைத்திடுங்கள், ஏதோவொன்று கிடைப்பதால் அல்ல. ஏதோவொன்று அல்லது யாரோவொருவரிடம் இருந்து சந்தோஷத்தை பிழிந்தெடுக்க முடியுமென்று நினைத்தால், நீங்கள் ஏமாற்றமடைவீர்கள், ஏனென்றால் எதிலிருந்தும் எதுவும் கிடைக்காது. உங்களுக்குள் பரவசத்தின் ரசாயனம் இருந்தால் மட்டுமே சந்தோஷம் இருக்கும்.
ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!