ஷாம்பவி மஹாமுத்ரா - தனித்துவம் என்ன?
உலகில் இன்றைக்கு இருக்கக்கூடிய பல தியானப் பயிற்சிகளுள், ஷாம்பவி மஹாமுத்ராவை தனித்துவமாக்குவது எது என்ற கேள்விக்கு சத்குரு பதில் அளிக்கிறார்.
தியானத்திலிருந்து மஹாமுத்ராவுக்கு
சத்குரு :“தியானம்” என்ற வார்த்தை எத்தனையோ பல விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, தொடர்ந்து ஏதோ ஒன்றின் மீது உங்கள் கவனத்தை குவித்திருந்தாலே மக்கள் நீங்கள் தியானத்தில் இருக்கிறீர்கள் என்பார்கள். ஒரு எண்ணத்தை நீங்கள் தொடர்ந்து நினைத்துக்கொண்டிருந்தால், நீங்கள் தியானத்தில் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். நீங்கள் தொடர்ச்சியாக ஒரு ஒலியை உச்சரித்தால், அது மந்திரமாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, அதுவும் தியானம் என்றுதான் அழைக்கப்படுகிறது. உங்களைச் சுற்றி நடப்பவை அல்லது உங்கள் உடலமைப்புக்குள் நிகழும் விஷயங்களைப் பற்றி நீங்கள் மனதளவில் விழிப்புடன் இருந்தாலும் அதுவும் தியானம் என்றே அழைக்கப்படுகிறது.இவற்றுள் எந்த பிரிவிலும் ஷாம்பவி சேராது. இதனால்தான், இதை நாம் மஹாமுத்ரா அல்லது கிரியா என்று அழைக்கிறோம். முத்ரா என்றால் என்ன? “முத்ரா" என்ற வார்த்தைக்கு இறுக்கமான கட்டு என்று பொருள் - நீங்கள் அதைப் பூட்டுகிறீர்கள். இன்றைய உலகில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக சக்தி சிதறடிக்கப்படுகிறது. இதுவே இப்போது மனிதர்களின் மிகப் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. ஏனென்றால், மனிதகுல வரலாற்றிலேயே முன் எப்போதையும்விட இப்போது தான் நமது புலன் உணர்ச்சி மண்டலம் மிக அதிகமாக தூண்டப்படுகிறது. உதாரணமாக, இன்றைக்கு நாம் ஒரு முழு இரவும் பிரகாசமான விளக்குகளின் வெளிச்சத்தில் உட்கார்ந்திருக்கமுடியும். உங்களது கண்கள் இதற்காகத் தயார் செய்யப்பட்டவை அல்ல – அவைகள் பன்னிரண்டு மணி நேரம் வெளிச்சத்திற்கும், பன்னிரண்டு மணி நேரம் இருளுக்கு அல்லது மிகக் குறைந்த வெளிச்சத்திற்கும் உருவாக்கப்பட்டவை. ஆனால், இப்போது உங்களுடைய கண்கள் அளவுக்கதிகமாகத் தூண்டப்படுகின்றன.
திணறவைக்கும் சுமை: அதீதமாக தூண்டப்படும் புலன்கள்
முந்தைய காலங்களில், நீங்கள் ஏதாவது ஒரு ஒலியைக் கேட்கவேண்டும் என்றால், ஒரு சிங்கம் கர்ஜனை செய்ய வேண்டியிருந்தது, ஒரு யானை பிளிற வேண்டியிருந்தது, அல்லது வேறு ஏதோ உற்சாகமூட்டும் ஒலி நிகழவேண்டியிருந்தது; இல்லையென்றால் சூழலே நிசப்தமாக இருந்தது. இப்போது எல்லா நேரங்களிலும் ஏதாவது சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. உங்களது காதுகள் மிக அதிகமாக உள்வாங்கிக்கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம், வண்ணங்களின் விளையாட்டை காண்பதற்கு சூரிய அஸ்தமனம் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. உங்கள் குடும்பத்தினரை நீங்கள் அழைத்து வந்து, அவர்கள் பார்ப்பதற்கு முன்பே அந்த காட்சி மறைந்தும் விடும். ஆனால் இப்போது, நீங்கள் தொலைக்காட்சியை ஆன் செய்தால் போதும், எந்த நேரமானாலும் எல்லாவிதமான வண்ணங்களும் அடுத்தடுத்து அணிவகுத்து உங்கள் கண்களை கூச வைக்க தயாராக இருக்கிறது.
இப்போது புலன்கள் மூலம் உங்களுக்குள் நீங்கள் எடுத்துக்கொள்ளும் தகவலின் அளவுபோல் முன்பு எப்போதும் இருந்ததில்லை. புலன் உறுப்புகள் மூலம் கிடைக்கும் தகவல்கள் உங்களுக்குள் இந்த அளவுக்கு இருக்கும்போது, நீங்கள் உட்கார்ந்து, “ஆஉம், ராம்,” அல்லது நீங்கள் நினைப்பது எதுவானாலும் அதை உச்சரிக்க நினைத்தாலும்கூட, அதுவும் முடிவில்லாமல் அடுத்தடுத்து வேறு ஒன்றிற்கு தாவுவதாகவே இருக்கும். தங்களுக்குள்ளேயே ஒரு சக்திமிகுந்த செயல்முறையை உருவாக்கவில்லையென்றால், இன்றைய உலகில், பெரும்பாலான மனிதர்களால் பகல்கனவு காணாமல், தம் கண்களை மூடியபடி உட்காரமுடியாது.
Subscribe
சக்தி விரயத்தை மடைமாற்றம் செய்தல்
ஒரு பூட்டு என்ற நிலையில் செயல்படும் இந்தக் காரணத்தினால்தான் மஹாமுத்ரா முக்கியத்துவம் பெறுகிறது. ஒருமுறை நீங்கள் முத்திரையிட்டு பூட்டிவிட்டீர்களென்றால், உங்களது சக்திகள் முற்றிலும் வேறொரு திசையில் தங்களையே மடைமாற்றிக்கொள்கின்றன. இப்போது அதற்கே உரித்தான விஷயங்கள் நிகழும். ஷாம்பவி மஹாமுத்ரா போல முதல் நாளிலிருந்தே மக்களை வெடிக்கச் செய்கின்ற பயிற்சிகள் மிகவும் அரிது. நீங்கள் மஹாமுத்ராவை மட்டும் சரியாக செய்தால், உங்களுக்குள் இருக்கும் சக்திகள், சாதாரணமாக அவை திரும்பாத ஒரு திசையில் திரும்புகின்றன. இல்லையென்றால், பலவிதமான புலன் உணர்வுத் தகவல்களுக்குமான எதிர்வினையிலேயே உங்களது சக்திகள் சிதறிப்போகின்றன. நீங்கள் எதையாவது தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தால், சிறிது நேரத்திலேயே களைப்படைந்துவிடுவதைப் போன்றது இது. கண்கள் மட்டுமில்லை – நீங்களே களைப்படைந்துவிடுகிறீர்கள்.
ஏனென்றால், நீங்கள் எதிலாவது கவனம் செலுத்தும் ஒவ்வொரு முறையும் உங்கள் சக்தியை இழக்கிறீர்கள். உங்களை நோக்கி ஒரு ஒளிக் கீற்று வருகிறது, நீங்கள் அதைப் பார்க்கவேண்டும் என்றாலும் சக்தி இழப்பு ஏற்படுகிறது. ஏதாவதொரு சப்தம் உங்கள் பக்கமாக வந்தாலும், நீங்கள் கேட்கவேண்டும் என்றால், சக்தி இழப்பு ஏற்படுகிறது. இப்படி இழப்புகள் ஏற்படுவதிலிருந்து மாற்றி, இலாபம் கிடைக்கும்படி சக்தியை திருப்பிவிடுவதற்கு நாம் விரும்புகிறோம். வெறும் 21 நிமிடப் பயிற்சிக்காக நாம் அவ்வளவு நேரம் செலவழித்து உளவியல்ரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் உங்களைத் தயார் செய்வது, உள்வாங்குவதற்கான சரியான நிலையை நீங்கள் அடையவேண்டும் என்பதற்காகத்தான்.
வலிமையான தாக்கத்திற்கான அறிவியல்பூர்வமான நிரூபணம்
ஷாம்பவி குறித்து அதிகளவில் ஆராய்ச்சிகள் நிகழ்ந்துவருகிறது. உங்களுக்கு இது தெரியுமா, இன்றைய உலகம் எப்படி என்றால், உங்களுக்குள் எதாவது நிகழ்ந்தால், அது மட்டும் போதாது. அது ஒரு சோதனைச்சாலையில் அளவீடும் செய்யப்பட வேண்டும். ஷாம்பவியை பயிற்சி செய்பவர்களுக்கு, கார்டிசால் விழிப்புணர்வு பதில் செயல் குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். BDNF என அழைக்கப்படும் மூளையின் நரம்புகள் புத்துணர்வு பெறுவதும் அதிகரிக்கிறது. இது பற்றிய ஆராய்ச்சி முடிவுகள்..
கார்டிசால் விழிப்புணர்வு பதில் செயலானது விழிப்புணர்வு நிலையின் பல்வேறு தளங்களை குறிக்கிறது. ஞானமடைதல் கூட விழிப்படைதல் என்றுதான் அழைக்கப்படுகிறது. ஏன்? ஏற்கனவே நீங்கள் விழிப்புடன் இல்லையா? இல்லை, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நீங்கள் ஒரே நிலையிலான விழிப்புடன் இருப்பதில்லை. நீங்கள் ஷாம்பவியை குறைந்தபட்சம் 90 நாட்களுக்குப் பயிற்சி செய்திருந்தால், காலையில் நீங்கள் கண்விழித்து முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, உங்களது கார்டிசால் (ஹார்மோன்) விழிப்புணர்வுச் சுரப்பியானது, ஒரு சாதாரண நபருக்கு இருப்பதைவிட பலமடங்கு உயர்ந்திருக்கிறது.
அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, முதுமையடைவதில் தாமதம்,குறையும் மனஅழுத்தம்!
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் பெருமளவு அதிகரிக்கிறது. அத்துடன், தொண்ணூறு நாட்களுக்கு நீங்கள் ஷாம்பவி பயிற்சி செய்த பிறகு, உங்களது செல்களின் அமைப்பின்படி, முன்பு இருந்ததைக் காட்டிலும் நீங்கள் 6.4 வருடங்கள் இளமையுடன் இருப்பதாக உங்களுடைய டி.என்.ஏ. பரிசோதனை காட்டுகிறது. இந்த முடிவுகள் அனைத்தும் உலகின் பொறுப்பு மிகுந்த அறிவியலாளர்களால் முறைப்படி உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, மிக அழகானது என்னவென்றால், மூளை சுறுசுறுப்பாக இருக்கும் அதேசமயம், அமைதி நிலையின் அளவும் பலமடங்கு அதிகரிக்கிறது. இதுதான் ஷாம்பவின் தனித்துவம்.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பெரும்பாலும் புத்தமத தியானமுறைகள் குறித்தவைதானே தவிர, யோகாவின் மற்ற பரிமாணங்களைப் பற்றி அல்ல. புத்தமத தியானங்களில் மக்கள் அமைதியும், மகிழ்ச்சியும் அடைவது அதன் குறிப்பிடத்தக்க அம்சம்; அதேநேரத்தில் மூளையின் செயல்பாடு குறைகிறது. ஷாம்பவியின் முக்கியத்துவம் என்னவென்றால், மக்கள் அமைதியையும், இனிமையையும் உணரும் அதேநேரத்தில், மூளையின் செயல்பாடு அதிகரிக்கவும் செய்கிறது.
பிரச்சனைகள் இல்லாத அமைதி மற்றும் சாத்தியக்கூறு
உங்களது மூளை செயல்பாட்டில் இருக்கவேண்டும். ஆன்மீகத்தின் பெயரில், மக்கள், “ராம், ராம்” என்றோ அல்லது வேறு ஏதோ ஒரு மந்திரத்தையோ தொடர்ந்து உச்சரிப்பதை நீங்கள் சாதாரணமாக பார்க்கிறீர்கள். வெறுமனே, “டிங் டாங் டிங் டாங்” என்பதையே நீங்கள் தொடர்ந்து உச்சரித்தால், நீங்கள் அமைதி அடைவீர்கள். அது ஒரு தாலாட்டைப் போன்றது. வேறொருவர் உங்களுக்குப் பாடவில்லை என்றால், உங்களுக்கு நீங்களே பாடிக்கொள்கிறீர்கள். நீங்கள் அமைதியடைவதற்கு அது உதவியாக இருக்கும். விழிப்புணர்வில்லாமல் எதேச்சையாக கண்டுபிடித்த இப்படிப்பட்ட யுக்திகளை ஒவ்வொருவரும் பயன்படுத்தி, தங்களுக்கு தாங்களே ஏதோ ஒன்றை திரும்பத் திரும்ப சொல்லிக்கொள்கின்றனர். அது புனிதமான ஒலி என்று அழைக்கப்படுவதாகவோ அல்லது அர்த்தமற்ற ஒரு ஒலியாகவோ இருக்கலாம். நீங்கள் அதை திரும்பத் திரும்ப உச்சரித்துக்கொண்டே இருந்தால், ஒருவித மந்தத்தன்மை எழும். மந்தத்தன்மையுடன் இருப்பதை, அமைதியாக இருப்பதாக சிலநேரங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
தற்போது உங்களிடம் இருக்கும் ஒரே பிரச்சனை மூளையின் செயல்பாடுதான். மூளையின் செயலை உங்களிடமிருந்து எடுத்துவிட்டால், நீங்கள் அமைதியாக, அற்புதமாக இருக்கலாம், ஆனால் சாத்தியங்கள் இருக்காது. அடிப்படையில், மனிதர்களின் பிரச்சனையே இவ்வளவுதான்: அவர்கள் தங்களது சாத்தியங்களை, பிரச்சனையாக உணர்கிறார்கள். உங்கள் சாத்தியங்களை நீங்கள் அகற்றிவிட்டால், பாதி மூளையை அகற்றிவிட்டால், பிரச்சனை தீர்ந்துவிடும்தான். கிடைத்துள்ள சாத்தியத்தை மேம்படுத்திக்கொள்ளும் அதேநேரம், அதனால் பிரச்சனையையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் இருப்பது – இதுதான் ஷாம்பவி மஹாமுத்ராவின் தனித்துவம்.