சுய சந்தேகம், வளர்ச்சியுடன் வரும் வலி - எப்படி கையாள்வது?
தென்னிந்திய நடிகை ரெஜினா கசாண்ட்ரா, இளைஞர்கள் சுய சந்தேகத்தை எப்படி எதிர்கொள்வது, குறிப்பாக வளரும் காலத்தில் அதை எப்படி கடப்பது என்று சத்குருவிடம் கேட்கிறார்.
ரெஜினா கசாண்ட்ரா: வளரும்போது, என்னைப் பற்றியும் என் திறமைகள் மற்றும் ஆற்றல்கள் பற்றியும் என் மனதில் நிறையவே கேள்விகள் இருந்தன. சுய சந்தேகம் என்பது, என்னைப்போல இன்னும் நிறைய இளைஞர்கள் வளரும் பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனை. ஒருவர் சுய சந்தேகத்தைக் கடப்பது எப்படி, குறிப்பாக இளைஞர்கள் இதை எப்படி கடப்பது?
சத்குரு:
சந்தேகம் உங்களுக்குள் தெளிவைக் கொண்டுவரும்.
நமஸ்காரம் ரெஜினா! உங்களை நீங்களே சந்தேகித்துக் கொள்வது நல்லது. அனைவரும் "உங்களை நம்புங்கள்!" என்றுதான் சொல்வார்கள். ஆனால் நான் "உங்களைப் பற்றி சந்தேகப்படுங்கள்" என்கிறேன். ஏதோவொன்று சரியாகவோ தவறாகவோ நடந்தால், எப்போதுமே அதற்கு காரணமானவர் நீங்களா என்பதை முதலில் பாருங்கள். அப்படி இல்லாவிட்டால், அதற்குப்பிறகு பிறரைப் பாருங்கள். தன்னம்பிக்கையானவர்கள் என்று அழைக்கப்படும் முட்டாள்கள், எல்லோர்மீதும் மிதித்து நடக்கிறார்கள். சந்தேகம் உங்களுக்குள் தெளிவைக் கொண்டுவரும். அப்போது நீங்கள் பூமியில் மென்மையாக நடப்பீர்கள்.
Subscribe
வளர்ச்சியால் வரும் வலி!
வளர்வது என்று சொல்லும்போது - ஒரு மனிதருக்குள் பல பரிமாணங்கள் உள்ளன - வளர்ச்சிக்கு, உடல்ரீதியான, மனோரீதியான, உணர்வுரீதியான, மற்றும் பிற பரிமாணங்களைச் சேர்ந்த அம்சங்கள் உள்ளன. பெரும்பாலான நேரங்களில் நாம் வளர்ச்சியை உடல்ரீதியாக மட்டுமே அளவிடுகிறோம், அடுத்து மனோரீதியாக அளவிடுகிறோம். மற்ற பரிமாணங்களை, நம் வாழ்க்கை நமக்கு சவால்விடுத்தால் மட்டுமே கண்டறிகிறோம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, உணர்வளவிலும் சக்தியளவிலுமான நம் வளர்ச்சியும், ஒரு உயிராக நம் வளர்ச்சியும், நம்மீது வாழ்க்கை சவாலான சூழ்நிலைகளை வீசும்போதுதான் தெரியவருகிறது. பெரும்பாலான மனிதர்கள், வாழ்க்கை சூழ்நிலைகளுக்குத் தாங்கள் செய்யும் எதிர் செயலை அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
வளர்வதால் வலி ஏற்படுகிறது என்றால், மனோரீதியான வளர்ச்சி உடல்ரீதியான வளர்ச்சிக்கு ஒருபடியேனும் முன்னோடியாக இல்லை என்று அர்த்தம்.
உடல்ரீதியான, மற்றும் மனோரீதியான வளர்ச்சியைப் பொறுத்தவரை, உடல் என்பது கண்கூடாக பார்த்துணரக் கூடியது, அதனால் அது ஒரு குறிப்பிட்ட வேகத்தில் வளர்கிறது. ஆனால் உங்களின் மனோரீதியான பரிமாணம் அந்த அளவு கண்கூடாகத் தெரிவதில்லை. அது வளைந்துகொடுப்பதாக, நெகிழ்வாக ஓடக்கூடியதாக, திடமாக இல்லாமல் மேகம் போல உருமாறக்கூடியதாக இருக்கிறது. அதனால் அவை உங்கள் உடல்செயல்முறைக்கு முன்னோடியாக வளரக்கூடியவை. வளர்வதால் வலி ஏற்படுகிறது என்றால், மனோரீதியான வளர்ச்சி உடல்ரீதியான வளர்ச்சிக்கு ஒருபடியேனும் முன்னோடியாக இல்லை என்று அர்த்தம்.
இந்தப் பூமியில் அதே விஷயங்கள் கோடான கோடி மக்களுக்கு காலம்காலமாக நடந்து வந்தாலும், அது பிரபஞ்சத்தில் முதல்முறை நடப்பது போலத் தெரிகிறது. மக்கள் இதை எதிர்பார்க்காதவர்களாய் அதிர்ச்சியடைகிறார்கள். இதற்கு ஒரே காரணம், அவர்களின் மனோரீதியான வளர்ச்சி உடல்ரீதியான வளர்ச்சியைவிட பின்தங்கியுள்ளது.
ஒவ்வொரு குழந்தையும் மனோரீதியான வளர்ச்சியில் உடல்ரீதியான வளர்ச்சிக்கு ஒரு படி முன்னால் இருக்கும்விதாமான ஒரு சமுதாயத்தை நாம் உருவாக்குவது மிகவும் முக்கியம்.
ஒவ்வொரு குழந்தையும் மனோரீதியான வளர்ச்சியில் உடல்ரீதியான வளர்ச்சிக்கு ஒரு படி முன்னால் இருக்கும்விதாமான ஒரு சமுதாயத்தை நாம் உருவாக்குவது மிகவும் முக்கியம். இந்த ஒரு விஷயத்தை உங்கள் வாழ்க்கையில் செய்துவிட்டால், இளமைப்பருவம், நடுத்தரவயது, முதுமைக்காலம் என்று எந்த ஒரு கட்டத்திலும், எதுவும் உங்களுக்கு எதிர்பார்க்காததாய் இருக்காது - அதை எப்படிக் கையாள்வது என்பதறிந்து அதை எதிர்கொள்வீர்கள். சாதாரண செயல்முறைகளால் உங்கள் வாழ்க்கையில் அதிர்ச்சியும் கொந்தளிப்பும் ஏற்படாது.
ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!