‘கும்பமேளா’ என்றவுடன் கூட்டம், நெரிசல், ஆடை அணியாத பாபாக்கள் என ஒரே மாதிரியான கண்ணோட்டம் மட்டுமே அநேகரிடத்தில் இருப்பதைப் பார்க்கமுடிகிறது! ஆனால், சத்குரு இங்கு தனது கும்பமேளா அனுபவத்தை விவரிக்கும்போது, கும்பமேளா குறித்த புதியதொரு பார்வை நமக்கு கிடைக்கிறது! தொடர்ந்து படித்தறியுங்கள்!

சத்குரு:

இவ்வுடலில் 72 சதவிகிதத்திற்கும் மேல் நீராக இருப்பதால், சூரிய சுழற்சியில் ஒரு குறிப்பிட்டநேரத்தில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில் நாம் இருக்கும்போது, நம் உடலுக்கு அதிகபட்சமான பலன் கிடைக்கிறது. கும்பமேளாவில், ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் பொருத்தமான சாதனா செய்தபடி இருந்தால் உடலையும் மனதின் அமைப்பையும், சக்தி நிலையையும் அதனால் மாற்றியமைக்க முடியும். அனைத்திற்கும் மேலாக உங்களுக்குள் அதிகப்படியான ஆன்மீக முன்னேற்றம் நிகழும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
கும்பமேளாவில், ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் பொருத்தமான சாதனா செய்தபடி இருந்தால் உடலையும் மனதின் அமைப்பையும், சக்தி நிலையையும் அதனால் மாற்றியமைக்க முடியும்.

இந்தியா, பல வகைகளையும், வண்ணங்களையும் கொண்ட அதிஅற்புதமான கலாச்சாரம். இங்கே வாழும் மக்கள், அவர்கள் பேசும் மொழி, உணவு, அவர்கள் உடை உடுத்தும் விதம், இசை, நாட்டியம் என அனைத்துமே ஒவ்வொரு 50, 100 கிலோ மீட்டருக்கும் மாறுபடுகிறது. இப்படி வேறுபட்டு நிற்கும் இந்த கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமென்றால், கும்பமேளாவிற்கு செல்ல வேண்டும்.

2001 ஆம் ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில், 6 கோடி மக்கள் அலகாபாத்தில் சங்கமித்தார்கள். இதுபோன்ற இடங்களுக்குச் செல்ல நான் ஏங்கியதில்லை, ஆனால் இதைப்பற்றி நிறைய பேச்சுக்கள் அடிப்பட்டதால் கற்பனைக்கு எட்டாத இந்த பிரம்மாண்ட நிகழ்வைப் பார்க்க நான் கோவையிலிருந்து காரில் பயணப்பட முடிவு செய்தேன்.

காலை 2 மணியளவில் அங்கே சென்றடைந்தபோது நாட்டின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடி வரையிருக்கும் பலதரப்பட்ட மக்கள் வந்திருந்தனர். பார்த்தாலே வியப்படையச் செய்யும் அற்புதக் காட்சி அது. தூங்கக்கூட இடமில்லை, தீ மூட்டி, அதைச் சுற்றி தத்தமது மொழிகளில் பேசிக் கொண்டு ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாய் மக்கள் அங்கு இருந்தனர்.

போலிச் சாமியார்களும் இருந்தனர், யோகத்-தில் உயர்ந்தவர்களும் இருந்தனர். போலி-யானவர்களுக்கு அவர்கள் தொழில் பிரதானமாய்ப் போக, சித்தி பெற்ற யோகிகளோ தங்கள் நோக்கமே கதி என்றிருந்தனர். பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் இவ்விடத்தில் கூடுகின்றனர். இது அழிக்க முடியாத ஒரு கலாச்சாரமாக வடிவம் பெற்றிருக்கிறது. சமூக நிலையிலும் உசிதமானதாகவே இருக்கிறது. இந்த சூழ்நிலை அமைவதற்கு அதன் பின்னணியில் உள்ள ஆன்மீக பலமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

அந்த குறிப்பிட்ட நாளில் ஒருவர் அவ்விடத்தில் இருந்தால், அரிதான வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கும். இதை அறிந்த மக்கள் அந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்வதற்காக அங்கு சென்றனர்.

ஒவ்வொரு 144 வருடங்களுக்கும் சூரிய மண்டலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஏற்படும், அதனை ஒட்டித்தான் மகாகும்பமேளா நடைபெறுகிறது. இது சென்ற முறை 2001 ஆம் ஆண்டு நடைபெற்றது. நாட்டின் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும்தான் இந்த மகாகும்பமேளா நடத்தப்படுகிறது. அதைச் சுற்றி சக்திநிலையை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

இந்த பூமி சுழல்வதால், மையவிலக்கு விசை உண்டாகிறது. பூமத்திய ரேகையிலிருந்து 33 டிகிரி ரேகை வரை உள்ள பகுதிகளில், மையவிலக்கு விசை உங்கள் உடலில் செங்குத்தாக வேலை செய்கிறது. குறிப்பாக 11 டிகிரியில், சக்தி உடலில் நேர்கோடாக மேலே செல்கிறது. இதன் அடிப்படையில்தான் முன்காலத்தில், இந்த பூமியில் எந்தெந்த இடங்கள் மக்கள் மேல் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என்பதை கணித்தும், அந்த இடங்களை குறித்தும் வைத்தார்கள். இப்படி கணிக்கப்பட்ட பல இடங்கள் நதிகள் சங்கமிக்கும் இடமாகவே இருந்தன.

அந்த குறிப்பிட்ட நாளில் ஒருவர் அவ்விடத்தில் இருந்தால், அரிதான வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கும். இதை அறிந்த மக்கள் அந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்வதற்காக அங்கு சென்றனர்.

கும்பமேளா - இத்தனை வித மனிதர்களா எனத் திணற வைக்கும் கலவை, எளிதில் காணக் கிடைக்காத, பலரும் கண்டிராத ஒரு காட்சி. நம்மை வியப்பில் ஆழ்த்தும் பக்தி வெள்ளம், மக்களுடைய பக்தியோ நம்பமுடியா அற்புதம்! இந்த பிரம்மாண்ட திருவிழாவில் கோடிக்கணக்கான மக்கள் நீராடுகிறார்கள். உங்களுக்கு இதயம் என்று ஒன்று இருந்தால் அது உருகிவிடும். இந்தச் சூழ்நிலை கிறுக்குத்தனமாய் தெரிந்தாலும் கிறங்கடிக்க வைக்கிறது...!