சத்குரு:

நூலாசிரியரும் அவரது கணக்கரும்

முதன்முதலில் மஹாபாரதம் எழுதப்பட்டபோது, அதை கணபதி 2,00,000-திற்கும் அதிகமான கவிதைகளுடன் எழுதினார். கதையாக சொல்ல விரும்பிய வியாசருக்கு, அதை சீராக குறித்துக்கொள்ள கணபதியை தவிர வேறுயாரும் பொருத்தமானவராக தெரியவில்லை. ஆனால் இதைப்போன்ற இலக்கிய குறிப்புகள் எடுக்க சலிப்புற்றிருந்தார் கணபதி. எனவே "ஒருமுறை நான் எழுதத் துவங்கினால் ஒருகணம்கூட நீங்கள் ஓய்வெடுக்க கூடாது. நான் ஒரு வார்த்தையை எழுதிமுடிக்கும் முன்பே அடுத்த வார்த்தை தயாராக சொல்லப்பட வேண்டும். நீங்கள் ஒரு கணம் தயங்கினாலும் நான் இதிலிருந்து விலகிவிடுவேன். நான் சும்மா இருக்கவேமுடியாத வகையில் கதையை நீங்கள் சொல்ல வேண்டும். இந்த சவாலை ஏற்க தயாரா? " என்று வியாசருக்கு சவால்விட்டார்.

 

2,00,000 கவிதைகளிலும், பலநூறு கதாபாத்திரங்கள் - யாரும் சும்மா வந்து செல்பவர்கள் இல்லை, ஒவ்வொருவரைப் பற்றியும் - அவர்களின் பிறப்பு, குழந்தைப்பருவம், திருமணம், சந்நியாசம், சாதனா, அவர்களின் வெற்றிகள், சந்தோஷங்கள், துக்கங்கள், அவர்களின் மரணம், இதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் முந்தைய பிறவி மட்டுமல்லாது அடுத்த பிறவி பற்றியும் ஏராளமான குறிப்புகள் இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வியாசர், "நல்லது. புதிதாக முயற்சி செய்து நான் இங்கே கதையை உருவாக்க வேண்டியதில்லை. அது எனக்குள் வாழ்கிறது - அதுதானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். உங்களுக்கு நானும் ஒரு நிபந்தனை வைத்திருக்கிறேன். உங்களுக்கு புரியாத ஒரு வார்த்தையைகூட நீங்கள் எழுதக்கூடாது" என்று கணபதிக்கு பதில் சவால் விடுத்தார். இருவருமே புத்திசாலித்தனமாக பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொண்டபிறகு வியாசர் கதையை சொல்லத் துவங்கினார். இந்த 2,00,000 கவிதைகளிலும், பலநூறு கதாபாத்திரங்கள் - யாரும் சும்மா வந்து செல்பவர்கள் இல்லை, ஒவ்வொருவரைப் பற்றியும் - அவர்களின் பிறப்பு, குழந்தைப்பருவம், திருமணம், சந்நியாசம், சாதனா, அவர்களின் வெற்றிகள், சந்தோஷங்கள், துக்கங்கள், அவர்களின் மரணம், இதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் முந்தைய பிறவி மட்டுமல்லாது அடுத்த பிறவி பற்றியும் ஏராளமான குறிப்புகள் இருக்கிறது. ஒடிசி, இலியாத் இரண்டையும் சேர்த்தாலும் கூட, அதைவிட மஹாபாரதம் 10 மடங்கு பெரியது.

எடைபோட வேண்டாம் - வாழ்ந்து பாருங்கள்.

இங்கே 21ம் நூற்றாண்டில் அமர்ந்துகொண்டு 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களை எடைபோட வேண்டாம் – அது மிகவும் நியாயமற்றதாக இருக்கும். இப்போது அவர்கள் மீண்டும் உயிருடன் திரும்பிவந்து உங்களைப் பார்த்தால், நீங்கள் இப்போது இருக்கும் நிலைக்கு உங்களைப்பற்றி பயங்கரமான முடிவுகளை எடுப்பார்கள் என்பது உறுதி. நல்லதா-கெட்டதா, சரியா-தவறா என்பதைப் பற்றி இது இல்லை. மனித இயல்பின் எல்லா பரிமாணங்களையும் இதைப்போலவோ இதற்கு முன்னரோ யாரும் எங்கும் பார்க்காத வகையில் நாம் ஆராய்ந்து பார்க்கப் போகிறோம் - வெறுமனே ஆழ்ந்து கவனித்துப் பார்ப்பது மட்டுமே… எதையும், யாரையும் எடைபோட வேண்டாம்.

இந்த கதையை நீங்கள் வாழ்ந்து பார்த்தால், வாழ்க்கை செயலே தெய்வீகத்தை அடையும் ஏணியாக இருக்க தர்மம் அனுமதிப்பதை புரிந்து கொள்ளலாம்.

முதன்முதலில் கதை சொன்ன வியாசர் கணபதியின் சவாலை ஏற்க காரணம், இந்தக் கதை நிலைத்து நிற்கவேண்டும் என்று அவர் விரும்பியதுதான். அதற்குப் பிறகு, ஆயிரக்கணக்கானவர்கள் சிற்சில மாற்றங்களுடன் அவரவர் சொந்த மஹாபாரதத்தை எழுதியிருக்கிறார்கள். அவரவர் ஜாதி, இன, குழு அடையாளங்களுடன் தேசத்தில் அவர்கள் வாழ்ந்த பகுதிக்கு, நேரத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை காலப்போக்கில் இக்கதை பெற்றிருக்கிறது. கதை சொல்லும்போது ஒவ்வொருவரும் தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் மக்களின் உணர்வுகளை தொடும் வகையில் கதையில் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் இந்த 5000 வருடங்களில் யாருமே கதையில் எந்த கலப்படமும் செய்யவில்லை. அதனால் மாற்றங்களால் சிதைவதற்கு பதிலாக கதை இன்னும் வளமாக மாறி இருக்கிறது. நீங்களும் அப்படியே பார்க்கலாமே. "இதில் யார் நல்லவர், யார் கெட்டவர்?" என்ற பார்வையில் யோசிக்காமல் அவர்களை வெறுமனே மனிதர்களாக பாருங்கள். அதுதான் நமக்கு வேண்டும்.

தர்மம் மற்றும் அதர்மம் என்பது அது, சரி - தவறு, நல்லது - கெட்டது பற்றி இல்லை. இது அரசராலோ, கோவிலிலோ, மக்களோ கட்டாயமாக பின்பற்ற வேண்டிய ஒரு வழிகாட்டல் இல்லை. இதன் விதிமுறைகளை நீங்கள் கிரகித்துக் கொண்டால், இது உங்களை உண்மையை நோக்கி நகர்ந்து செல்ல அனுமதிக்கும். இந்த கதையை நீங்கள் வாழ்ந்து பார்த்தால் அது ஒரு சக்திவாய்ந்த ஆன்மீக செயல்முறையாக உங்களுக்கு இருக்கும். இந்த கதையில் நீங்கள் தீர்ப்பு சொல்ல முயற்சி செய்தால் உங்கள் வாழ்க்கையில் அது பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தும். ஏனென்றால் அதன்பிறகு எது சரி - எது தவறு என்று தெரியாது, எதைச் செய்யலாம் - எதைச் செய்யக்கூடாது என்று தெரியாது, குடும்பத்துடன் வாழ்வதா அல்லது காட்டுக்கு போவதா என்று தெரியாது, போரில் இறங்கி சண்டை போடலாமா - வேண்டாமா என்று தெரியாது. இந்த கதையை நீங்கள் வாழ்ந்து பார்த்தால், வாழ்க்கை செயலே தெய்வீகத்தை அடையும் ஏணியாக இருக்க தர்மம் அனுமதிப்பதை புரிந்து கொள்ளலாம். தவறினால் வாழ்க்கை செயலே நரகத்திற்கான சறுக்கு மரமாக மாறுகிறது -இதைதான் பெரும்பாலான மக்கள் செய்கிறார்கள்.

மஹாபாரதத்தின் இறுதியில் நடக்கப்போவதுதான் உங்களுக்குத் தெரியுமே.. அதை அப்படியே ஓரமாக வைத்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கையின் அழகை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றால், முடிவைப் பற்றி நினைக்காமல் இந்த கதையை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மகாயுத்தத்தில் ஒரு சிராய்ப்புகூட இல்லாமல் கலந்துகொள்ள கதைவடிவம் ஒரு அற்புதமான வாய்ப்பு. நீங்கள் இதைக் கடந்து செல்வது முக்கியமானது, ஏனென்றால் மனிதர்களின் அனுபவங்களை அவர்களின் எண்ணங்களும் உணர்ச்சிகளுமே பெருமளவு வடிவமைக்கிறது.

ஆசிரியர் குறிப்பு : நமது ஈஷா தமிழ் வலைப்பக்கத்தில் மஹாபாரதம் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. கதையை வாழ்ந்து பார்க்கலாம் வாருங்கள்.