என் கல்வி அர்த்தமற்றதாக தோன்றுவது எதனால்?
சமீபத்தில் நிகழ்ந்த இளைஞரும் உண்மையும் உரையாடலின்போது, ஒரு மாணவி தனது கல்வியின் பெரும்பகுதி அர்த்தமற்றதாகத் தெரிவது எதனால் என்று கேட்கிறார். தனிப்பட்ட மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு ஊட்டமளிக்கும் விதமாக, இந்தியாவின் கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்த எடுக்கப்பட்டுவரும் படிகள் குறித்து சத்குரு விளக்குகிறார்.
கேள்வி : நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் இளநிலை படிப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். என் கேள்வி, நாங்கள் அனைவரும் 15 வருடங்களுக்கு மேலாக படித்திருக்கிறோம், ஆனால் நாங்கள் படித்த விஷயங்கள் பயனற்றது போலவே தெரிகின்றன. இப்படி படித்தவற்றில் சில விஷயங்கள் அர்த்தமற்றதாகத் தெரிவது எதனால்?
சத்குரு:
பொறியியல் கல்லூரியில் அப்படி நடக்கக்கூடாது! உயர்நிலைப் பள்ளியில் அப்படி நடப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது - அங்கு நீங்கள் படிப்பதில் பெரும்பகுதி அர்த்தமற்றதாகவே இருக்கிறது. ஆனால் பொறியியல் கல்லூரியில் அப்படி நடக்கக்கூடாது.
பெரும்பாலும் இங்கிலாந்து அரசுக்கு சேவை செய்ய கிளெர்க்குகளை உருவாக்கும் விதமாகத்தான் நம் கல்விமுறை உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியில் படைப்பாற்றலை வளர்க்கும் தன்மை இருக்கவில்லை - கீழ்ப்படிதலே முக்கிய அம்சமாக இருந்தது. அதனால்தான் ஒரு புத்தகம் முழுவதையும் அப்படியே மனப்பாடம் செய்து வாந்தியெடுக்க வேண்டியிருக்கிறது. அதைத்தான் கல்வியில் சாதிப்பதாகக் கருதுகிறார்கள். பொறியியல் கல்வி பற்றி நான் அப்படிச் சொல்லமாட்டேன் - அது மாறுபட்டது என்றே நான் நினைக்கிறேன்.
பெரும்பாலும் இங்கிலாந்து அரசுக்கு சேவை செய்ய கிளெர்க்குகளை உருவாக்கும் விதமாகத்தான் நம் கல்விமுறை உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியில் படைப்பாற்றலை வளர்க்கும் தன்மை இருக்கவில்லை - கீழ்ப்படிதலே முக்கிய அம்சமாக இருந்தது.
கல்வியின் நோக்கத்தை மாற்றுவது
இந்தியாவில் நெசவுத் தொழிலுக்கு கொள்கை உருவாக்கினோம், நதிகளுக்கும் விவசாயத்துக்கும் கொள்கை உருவாக்கினோம், தற்போது கல்விக்கு ஒரு கொள்கையை உருவாக்குவதில் மும்முரமாக இருக்கிறோம். நான் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, சமீபத்தில் அரசு இப்படி அறிவித்துள்ளது, “பள்ளியில் செலவிடும் நேரத்தில் 50 சதம் மட்டுமே புத்தகப்படிப்பு சார்ந்ததாக இருக்கவேண்டும், மற்ற நேரம் விளையாட்டு, கலை, இசை, கைவினை மற்றும் வேறு பல விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்". இதை ஒரு மாதத்திற்கு முன்புதான் அறிவித்தார்கள். அறிவிப்பு நல்லதுதான், ஆனால் இந்த மாற்றம் நோக்கி நகர்வதற்குத் தேவையான வசதிகளின்றி பள்ளிகள் இருக்கின்றன. நான் எப்போதுமே சொல்வது, கணிதத்திற்கும் அறிவியலுக்கும் நாம் கொடுக்கும் அதே முக்கியத்துவம், இசைக்கும் கலைக்கும் இன்னும் பல விஷயங்களுக்கும் கொடுக்கவேண்டும். நாங்கள் நடத்தும் பள்ளிகளை இப்படித்தான் நடத்துகிறோம், ஆனால் அவை மிகவும் குறைவான எண்ணிக்கையே.
Subscribe
தற்போது மத்திய அரசு இப்படி அறிவித்துள்ளது, ஆனால் களத்தில் இதை அமல்படுத்துவது இன்னும் வெகுதொலைவில் இருக்கிறது. இதற்கு மனிதவளம் தேவை, பொருள்நிலையில் உரிய வசதிகள் தேவை, பயிற்சியும் இன்னும் பல விஷயங்களும் தேவைப்படுகின்றன, இவை நம் தேசத்தில் இன்னும் நிகழவில்லை. இதற்கு காலம் பிடிக்கும், ஆனால் அந்த நோக்கமாவது இப்போது வந்திருக்கிறது. பள்ளியில் குழந்தைகள் பாட புத்தகத்துடன் செலவிடும் நேரத்தை, 3 அல்லது அதிகபட்சமாக 4 மணி நேரமாக எப்படி குறைப்பது என்று பார்க்கிறோம். மற்ற நேரங்களில் அவர்கள் பிற விஷயங்களைக் கற்கவேண்டும்.
வளர்ந்து வரும் அபாயம்
நீங்கள் எந்தவொரு விவசாயியிடமும், அவர்தன் பிள்ளையை விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்புகிறாரா என்று கேட்டால், 2 முதல் 4 சதவீத விவசாயிகள்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே 25 ஆண்டுகளில், இந்தத் தலைமுறை கடந்ததும், நம் தேசத்தில் உணவு விளைவிக்கப்போவது யார்?
தற்போது நாம் எப்படிப்பட்ட தேசம் உருவாக்கியுள்ளோம் என்றால், ஒரு விவசாயியின் மகன் தனது தந்தையுடன் வயலுக்குச் சென்று, இருவரும் நிலத்தில் விவசாயம் செய்தால், தந்தையை குழந்தை தொழிலுக்காக கைது செய்துவிடுவார்கள். ஆம், நிஜமாகத்தான்! தேசத்தில் மிக அபாயகரமான ஒரு நிலை வளர்ந்து வருகிறது, நீங்கள் எந்தவொரு விவசாயியிடமும், அவர்தன் பிள்ளையை விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்புகிறாரா என்று கேட்டால், 2 முதல் 4 சதவீத விவசாயிகள்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே 25 ஆண்டுகளில், இந்தத் தலைமுறை கடந்ததும், நம் தேசத்தில் உணவு விளைவிக்கப்போவது யார்?
உங்களுக்கு தொழில்நுட்பரீதியான அறிவு இருக்கலாம், நீங்கள் MBA படித்திருக்கலாம், இன்னும் பல விஷயங்கள் செய்திருக்கலாம். ஆனால் விவசாய நிலத்துக்குச் சென்று அதில் ஒரு பயிரை விளைவித்துக் காட்டுங்கள், பார்ப்போம்! அது மிகவும் சிக்கலானது! விவசாயம் என்பது படிப்பறிவு இல்லாதவர்களுக்கு என்று நாம் நினைக்கிறோம், ஆனால் அது உண்மையில்லை. அது மிகவும் சிக்கலான, நுட்பமான செயல்முறை. முறையான கல்வி கற்கவில்லை என்பதால் விவசாயிக்கு தேவையான மூளைத்திறன் இல்லை என்று அர்த்தமில்லை. அவருக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு அறிவு இருக்கிறது, அதனால்தான் நாம் அனைவரும் இன்று உணவு உண்கிறோம், நம் வயிறு நிறைகிறது. ஆனால் அடுத்த 25 ஆண்டுகளில் நமக்குத் தேவையான உணவை நம்மால் விளைவிக்க முடியாத அபாயகரமான நிலையில் இந்த தேசம் இருக்கிறது.
அறிவாற்றலை அடையாளம் காண்பது
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகள் மட்டுமே ஏட்டுக் கல்விக்குள் நுழைய வேண்டும். மற்ற குழந்தைகள் வேறு பல திறமைகளை கற்கமுடியும், தங்கள் நலனுக்காக தேசத்தில் வேறு பல விஷயங்களை அவர்கள் செய்யமுடியும். அனைவரின் மூளையும் ஏட்டுக்கல்விக்கு ஏதுவாக இருப்பதில்லை. தற்போது நிறைய குழந்தைகள் கல்விகற்கும் காலத்தில் வேதனைப்படுகிறார்கள். அவர்கள் இப்படிப்பட்ட கல்விமுறையில் பயிலக்கூடாது, அவர்கள் அறிவாற்றல் எந்தத் துறையில் இருக்கிறது என்பதற்கேற்ப பிற திறமைகளை அவர்கள் வளர்க்கவேண்டும். ஆனால் உங்கள் இயல்பான அறிவாற்றலை, நீங்கள் ஆனந்தமாக எந்தத் துறையில் சிறப்பாக செயலாற்ற முடியும் என்பதைக் கண்டறிய இப்போது எவருமில்லை.
ஒரு எலக்ட்ரீசியன் அல்லது மரத் தச்சருக்கு, டாக்டர் அல்லது இன்ஜினியருக்கு இருக்கும் அதே கௌரவம் இருக்கவேண்டும். அப்போதுதான் கல்வி சரிசமமாக வழங்கப்பட முடியும்.
10 வயது முதல் 15 வயதிற்குள், மாணவர்கள் தாங்கள் கற்க விரும்புவதை தேர்வுசெய்யும் விதமான செயல்முறை நம் கல்விமுறையில் இருக்கவேண்டும். தற்போது அனைவரும் மருத்துவக்கல்வி அல்லது பொறியியல் கல்வியை நாடுவது, சமுதாயத்தில் அதுதான் கௌரவம் என்று கருதும் அவலத்தால்தான். ஒரு எலக்ட்ரீசியன் அல்லது மரத் தச்சருக்கு, டாக்டர் அல்லது இன்ஜினியருக்கு இருக்கும் அதே கௌரவம் இருக்கவேண்டும். அப்போதுதான் கல்வி சரிசமமாக வழங்கப்பட முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, நம் எவருக்கும் இருப்பதற்கு மேலான ஒரு மதிப்பு விவசாயிகளுக்கு இருக்கவேண்டும், ஏனென்றால் அவர்கள்தான் நமக்கு உணவு வழங்குகிறார்கள்.
ஆசிரியர் குறிப்பு: நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.